சரியான நிதிசார் பொருட்களை (financial products) தேர்வு செய்வது எப்படி?

எனது  தேவைக்கேற்ற நிதிசார் பொருட்களை தேர்வு செய்வது எப்படி? இந்த கேள்வியை பலரும் அடிக்கடி கேட்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். இதற்கு மாறாக, பெரும்பாலான முதலீட்டாளர்கள் (அல்லது பல), சம்பாதிக்க தொடங்கியவுடன், வரிசேமிப்பு செய்ய சிறந்த முதலீடு எது? சிறந்த ஓய்வூதிய திட்டம் எது? சிறந்த குழந்தைகள் திட்டம் எது? சிறந்த ஊடுறவு நிதி (mutual fund) எது? என கேட்கின்றனர்.

தவறான  கேள்விக்கு அளிக்கும் சரியான பதில் எந்த பலனையும் தரப்போவதில்லை. தனி நபர் தேவைகளில் கவனம் செலுத்தி, பெயரளவான கேள்விக்கு விடையளிக்கும் ஒரு முயற்சி இது. முதலில், ஒரு முதலீட்டுச் செயல்நெறியை (investment strategy) தீர்மானிக்க  வேண்டும். பின்னர்,  சரியான  பொருள்  வகையை (class of product) தேர்வு செய்ய வேண்டும். இதன் பின்னரே (இதன்பின் மட்டுமே) சரியான நிதிசார் பொருளை தேர்வு செய்ய முடியும்.

இந்தப் பதிவு  வருவாய் ஈட்டத் தொடங்கும் இளம் தலைமுறையினருக்காக இயற்றப்பட்டது. நம் வலைத்தளத்தின் மற்ற மூத்த பயனர்கள்(experienced users) இந்த பதிவை, இளம் தலைமுறை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிரவும்.

சில தன்விளக்க(self explanatory) கேள்விகள்:

ஒவ்வொரு மாதமும் சேமிப்பதற்கு அல்லது முதலீடு செய்வதற்கு என்னால் எவ்வளவு பணம் ஒதுக்கமுடியும்?

உங்கள் பணப் புழக்கத்தை ஒரு சிறிய ஆய்வு செய்தால் போதும். வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு மற்றும் மீதம் எவ்வளவு என்ற தகவலே இந்த கேள்விக்கு விடையளித்துவிடும்.

மீதமுள்ள பணத்தில் எவ்வளவு பணத்தை நான் குறுகிய கால இலக்குகளுக்காக (short term goals) சேமிக்க முடியும்?

இந்த இலக்குகளுக்கான தர ஏற்புநிலை(benchmark) என்பது மூலதன பாதுகாப்பே (capital protection) ஆகும். அதாவது, மாற்றமிகு சாதனங்களில்(volatile instruments) முதலீடு செய்யக்கூடாது. நீர்ம  ஊடுறவு நிதி(liquid mutual funds) மற்றும் மிக குறுகிய கால கடன்சார்  ஊடுறவு நிதி (ultra short term funds) தவிர, பங்குகள் (stocks), பங்குசார் ஊடுறவு நிதி (equity mutual fund), தங்கம், ULIP மற்றும் அனைத்து கடன்சார்  ஊடுறவு நிதி (debt mutual fund) ஆகியன மாற்றமிகு சாதனங்களாக கருதப்படும்.

எளிய நிதிசார் பொருட்களான வைப்புத்தொகை (fixed deposit) மற்றும் தொடர் வைப்புத்தொகையே (recurring deposit) போதுமானது. 3 ஆண்டுகளுக்கும் கீழான இலக்குகளுக்கு வரிப்பொறுப்பு (tax liability) மற்றும் பணவீக்கம் (inflation) பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

இந்த இலக்குகளுக்கு ஒரு தொகுமுதலீடு(portfolio) தேவையில்லை. ஒரே ஒரு நிதிசார் பொருளே போதுமானது. இந்த பொருட்களில் வருமானம் மாறாமல் உறுதியாக வருமெனில், பணப்புழக்கம் பற்றிக் கவலை கொள்ள தேவையில்லை. தைரியமாக இவற்றில் முதலீடு செய்யலாம்.

எனது நெடுங்கால இலக்குகளுக்கு* ( long term goals – 10 ஆண்டுகளுக்கு மேலாக) எவ்வளவு பணம் முதலீடு செய்யப் போகிறேன்?

இந்த இலக்குகளுக்கான முதன்மையான தர ஏற்புநிலை(benchmark) என்பது பணவீக்கம். இரண்டாவது தர ஏற்புநிலை வரிபொறுப்பை(tax liability) குறைப்பதாகும்.

இந்த இலக்குகளுக்கு தொகுமுதலீடு(portfolio)  ஒரு அவசியத்தேவை. இந்த தொகுமுதலீடு பலதரப்பட்ட நிதிசார் பொருட்களை கொண்டிருக்கவேண்டும்.

குறிப்பாக, பணவீக்கத்தை வீழ்த்தும் திறன் கொண்ட சில மாற்றமிகு சாதனங்களாக இருக்கவேண்டும். உதாரணமாக, பங்குகள்(stocks) மற்றும் பங்குசார் ஊடுறவு நிதி (equity mutual funds) போன்ற சாதனங்களை கொண்டிருக்க வேண்டும்.

மேலும், பணவீக்கத்தை வீழ்த்தாவிடினும், சில நிலையான நிதிசார் பொருட்களை கொண்டிருக்கவேண்டும். இவை ஒரு தொகுமுதலீட்டிற்கு தேவையான நிலைப்பை(stability) தருகிறது. உதாரணமாக, நிலையான வருமானம் தரும் சாதனங்களான கடன்சார் ஊடுறவு நிதியை  (debt mutual fund)  கொண்டிருக்கவேண்டும். உங்கள் வரிப்பொறுப்பை குறைக்கும் காரணத்தினால் வைப்புநிதியை(fixed deposit) விட கடன்சார்  ஊடுறவு நிதியில்(debt mutual funds) முதலீடு செய்வது சிறந்தது.

இந்த இரு வகையான சாதனங்களும் நம் இலக்குகளை அடைய மிகவும் முக்கியம் என்று உணர்ந்தபின், நாம் செய்ய வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை, இலக்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தீர்மானம் செய்வது. அதாவது, பங்குகள்(equity) மற்றும் நிலையான வருமானம் (fixed income) தரும் சாதனங்களின் இடர்காப்பின்மை சதவீதத்தை(percentage exposure) முடிவு செய்யவேண்டும். உதாரணமாக, 50% பங்குகள் மற்றும் 50% நிலையான வருமானம் தரும் சாதனங்கள் என எடுத்துக்கொள்வோம்.

உங்கள் வரிப்பொறுப்பை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருவகையான சாதனங்களிலும் உண்டு. மாற்றமிகு  சாதனத்தில், மூன்று ஆண்டுகள் முடக்கக்காலம் (lock-in period) கொண்ட Equity Linked Savings Scheme (ELSS)  ஊடுறவு நிதியும் மற்றும்  நிலையான வருவாய் சாதனத்தில், பதினைந்து ஆண்டுகள் முடக்கக்காலம் (lock-in period)  கொண்ட பொது வருங்கால வைப்புநிதியும் (public provident fund) உள்ளன.

நெடுங்கால இலக்குகளுக்காக ஒதுக்கப்பட்ட முதலீடுகளை வரிப்பொறுப்பை குறைக்கும் சாதனங்களிலும் முதலீடு செய்யலாம். உதாரணமாக, நெடுங்கால இலக்குகளுக்காக ₹2 லட்சம் ஒதுக்கப்பட்டால், இதனுள் ₹1.5 லட்சம் வரிப்பொறுப்பை குறைக்கும் சாதனங்களில் முதலீடு செய்யலாம். 50% ELSS ஊடுறவு நிதியிலும் மற்றும் 50% பொது வருங்கால வைப்புநிதியிலும். இவை முன்னர் கூறிய நிதி ஒதுக்கீட்டு தீர்மானத்துடன் ஒத்துப்போவதை காண்க.

முக்கிய குறிப்புகள்:

உங்களுக்கு எப்போது பணம் தேவை என்பதை கருத்தில்கொண்டு நிதிசார் பொருட்களின் வகைகளை தீர்மானிக்கவேண்டும். சரியான பொருள் வகையை தேர்வு செய்வது முக்கிய படிநிலையாகும். இதுகுறித்த தெளிவு இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பொருளை தேர்வு செய்வது மிகவும் எளிது. இவற்றுள், ஒன்று வரிப்பொறுப்பு குறைப்பு சாதனமாக (tax saving product) இருக்கலாம். பங்குசார் ஊடுறவு நிதி (equity mutual fund), மற்றும் கடன்சார்  ஊடுறவு நிதியை (debt mutual fund)  தேர்வு செய்வது குறித்து நம் இணையதளத்தில் பல பதிவுகள் உள்ளன. அவற்றை தேடுபொறியில் ஒரு சிறு தேடலில் நீங்கள் அடையலாம்.

ஒரு நிதிசார் சாதனத்தின் நீர்மைத்தன்மை (liquidity – எளிதில் பணமாக மாற்றும் தன்மை) ஒரு முக்கிய காரணியாகும். ஒரு சொத்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் எளிதில் பணமாக மாற்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே அதை ஒரு சொத்தாக கருதவேண்டும். இந்த காரணத்தினாலேயே, வீடு மற்றும் நில உடமைகள் அசையா சொத்துக்கள் என அழைக்கபடுகின்றன. இவற்றில் முதலீடு செய்யும்முன் நன்கு யோசிக்க வேண்டும்.

இதேபோல், தேசிய ஓய்வூதிய திட்டமும்(National Pension Scheme – NPS) நீர்மைத்தன்மையற்றது. வரிப்பொறுப்பை குறைப்பதற்காக ₹50,000யை தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யவேண்டாம்.

உங்கள் தேவையின் போது அல்லது அவசர சூழலின் போது எளிதில் பணமாக மாற்ற முடியாத எந்த சாதனங்களிலும் முதலீடு செய்யவேண்டாம். அவசரகால நிதி(emergency fund) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே உதவும்.

சாதாரண சூழ்நிலைகளில், மேற்கூறிய அனைத்து சாதனங்களும் அதிக நீர்மைத்தன்மை கொண்டவை.

(*) 5 முதல் 10 ஆண்டுகளுக்குள்  வரும் இடைநிலை இலக்குகளுக்கு திட்டமிடல் சிறிது கடினமான காரியம். இதற்கு, இந்த பதிவு உங்களுக்கு உதவக்கூடும்.

இடைநிலை இலக்குகளுக்குக்கான  திட்டமிடல்

சுருக்கமாக, சரியான நிதிசார் பொருளை தேர்வு செய்ய,

  1. உங்கள் தேவைகளை புரிந்துகொள்ளுங்கள்.
  2. முதலீட்டுச் செயல்நெறியை(investment strategy) எழுதுங்கள்.
  3. செயல்நெறியுடன் ஒத்துப்போகும் நிதிசார் பொருள் வகைகளை பட்டியலிடுங்கள்.
  4. அந்த வகைகளிலிருந்து சரியான பொருளை தேர்ந்தெடுங்கள். (இவை வரி சேமிப்பு சாதனைகளை உள்ளடக்கியும், செயல்நெறியின் சாராம்சத்தையும்  உள்ளடக்க வேண்டும்.)

This page is the Tamil translation of How to Choose the Right Financial Product.

ஆசிரியர்: freefincal

மொழிபெயர்ப்பாளர்: Venkatesh Jambulingam