சிக்கனம்: தனிமனித பொருள்வளத்தின் ஆதாரக்கல்

வாழ்வில் வரும் இன்பங்களை அனுபவிக்காமல், எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைக்கும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையே சிக்கனம் அல்லது எளிய வாழ்வியல்முறை என பலரும்  தவறாக புரிந்துகொள்கின்றனர்.

சிக்கனமான வாழ்க்கையைப் பற்றியோ அல்லது தனிமனித பொருள்வளம் பற்றி பேசத் தொடங்கினால், நீங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள். அதிலும் குறிப்பாக 20 களில் இருக்கும் இளம்தலைமுறையினர் ,”அனைவரும் ஒரு நாள் மரணிக்க வேண்டியவர்களே!  அதனால் ஏன் வாழும்போது வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது? நிச்சயமற்ற எதிர்காலத்திற்காக ஏன் நிகழ்காலத்தை வீணாக்க வேண்டும்?” என்று உங்களை விமர்சிக்கக் கூடும். இத்தகைய தவறான புரிதல்

உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதற்கு  உறுதியான வழி.

சிக்கனம் என்றால் என்ன?

சிக்கனம் என்பது தனிமனித கருத்து. (தனிமனித பொருள்வளத்தைப் போலவே!). என்னைப் பொருத்தவரை இதை நான் விரைய மேலாண்மை எனவே கூறுவேன். அதாவது, உடல்நலன் விரயம், நேர விரயம், முயற்சி விரயம் மற்றும் பண விரயம். செலவைக் கட்டுப்படுத்துதல் என்பது இலக்கு இல்ல. அது ஒரு விரும்பத்தக்க செயல் விளைவே.

பணம் சார்ந்த வரையறை மூலம் விவரிக்க வேண்டுமென்றால், சிக்கனம் என்பது நாளைய செலவுகளை இன்றே தடுக்க முயல்வது. சிக்கனம் என்பது தனிப்பட்ட கருத்து என்பதால், நான் செய்யும் செயல்கள் உங்களுக்கோ அல்லது நீங்கள் செய்யும் செயல்கள் எனக்கோ நேரிடையாக பொருந்தாது. ஆனால் நாம் சில பொதுவான கருத்துக்களை இங்கே காண்போம்.

உடல்நலம் ஒன்றே உங்கள் நிதியறிவுரைஞர் உங்களுக்கு உதவமுடியாத ஒரு முதலீடு. என்னைப் பொருத்தவரை உங்களைத் தவிர வேறு யாராலும், ஏன் ஒரு மருத்துவராலும் கூட, இந்த விடயத்தில் உங்களுக்கு உதவமுடியாது. அதிகரித்து வரும் நீரிழிவு நோய், இதய பிரச்சினைகள், உடல் பருமன், தசை வலி, மன அழுத்தம், பதற்றம், புற்றுநோய் போன்ற நோய்களை நாம் புறக்கணிக்க இயலாது. இந்தப் பட்டியல்  மேலும் நீண்டுகொண்டே போகிறது. 30களில் இருக்கும் மக்களை இந்நோய்கள் பாதிக்கின்றன என்பதை மறக்கவும் இயலாது.

நீங்கள் போதுமான அளவிற்கு சம்பாதிக்கலாம். நீங்கள் குறைந்த அளவு கடனுடனோ அல்லது கடனே இல்லாமலோ இருக்கலாம். உங்கள் பொருள்வளத்தை/செல்வத்தை ஒரு நிதியறிவுரைஞர் கவனித்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் உடல் நலனில் அக்கறையின்றி, அதிகம் புகைப்பிடிப்பது, அதிக அளவு மது குடிப்பது போன்ற பழக்கங்களை கொண்டிருந்தால், நீங்கள் கனவு கண்டது போல் உங்கள் சொத்துக்கள் மற்றும்  பொருள்வளம் கூடிப்பெருகும் நிலையை பார்க்க முடியாமற்போகும் வாய்ப்பு மிக அதிகம்.

ஒரு நேரடி எடுத்துக்காட்டு:

இது ஒரு பிரசங்கம்(நான் ஒரு ஆசிரியர் ஆயிற்றே. எளிதில் வருகிறது) போல் உங்களுக்கு தோன்றுவதற்கு முன்னால், எனது வாழ்க்கையில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைக்  கொண்டு சிக்கனமும் தனிமனித பொருள்வளமும் எவ்வாறு தொடர்புடையது என்று விளக்குகிறேன்.

சில வருடங்களுக்கு முன், நான் 25 கிலோ அதிக எடையுடன் இருந்தேன். இவற்றோடு எனக்கு உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, கழுத்து வலி, முதுகு வலி மற்றும் முழங்கால் வலி இருந்தது.

எளிய அணுகுமுறையின் காரணத்தால், மேற்கூறிய வியாதிகள் இன்று என் கட்டுக்குள் உள்ளன. இதற்காக நான் முதலில் செய்தது, எனது வீட்டில் சூரிய காந்தி எண்ணெய்க்கு (தோராயமாக ஒரு கிலோ ₹100) பதிலாக ஆலிவ் எண்ணெய்யை (தோராயமாக ஒரு கிலோ ₹700)  மாற்றியதுதான். இது ஒரு சிக்கன நடவடிக்கை, பணத்தின் அளவினால் அல்ல எண்ணெய்யின் உபயோக அளவினால். இதனால் மாதம் 2 முதல் 3 கிலோ சூரியகாந்தி  எண்ணெய்  உபயோகித்த என் குடும்பம், 1 கிலோ ஆலிவ் எண்ணெய் மட்டுமே உபயோகித்தது. இந்த எண்ணெய்யை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், என் தாயார் என்னை ஊதாரி என்றும், பணத்தின்  மதிப்பு தெரியாதவன் என்றும் திட்டிக்கொண்டே சமைப்பார்கள். நான் மேலும் ஒரு கிலோ ஆலிவ் எண்ணெய் வாங்கிவிடுவேனோ என்ற அச்சத்தில் சமையலில் எண்ணெயின் அளவை கணிசமாக குறைத்தார்கள். அதிக விலைகொடுத்து வாங்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களை அச்சமூட்டித் தடுத்தது(உபயோகத்தை குறைத்தது).

இந்த அதிகவிலை எனது பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தியதா? இல்லை. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஆலிவ் எண்ணெய் உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் இது நல்ல முதலீடாகும். இரண்டாவதாக, ஆலிவ் எண்ணெய்க்கு  மாறிய பொது, நொறுக்கு தீனிகளின் செலவை குறைக்க வேண்டும் என்று  முடிவு செய்தோம்.

கடந்த 5 ஆண்டுகளில், அதிக விலை கொண்ட ஆலிவ் எண்ணெய்க்கு மாறிய பிறகும் எங்கள் மாதாந்திர மளிகை செலவில் பெரிய மாற்றம் இல்லை என்பதை உண்மை. இதற்கான காரணம் நொறுக்கு தீனிகளின் செலவைக் குறைத்ததே!

இந்த காலகட்டத்தில் பணவீக்கம் இரட்டை இலக்கங்களை எட்டியிருந்தாலும், சிக்கனமான வாழ்க்கை எங்கள் நிதிநிலையை சமன் செய்ய உதவியது.

இந்த நடவடிக்கையின் உண்மையான பிரதிபலன் முன்னேறிய என் உடல்நலன் மற்றும் இதனால் உண்டாகும் பல்வகைப் பலன்கள். உங்கள் முடிவுகள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உங்களை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என தீர ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத்தூண்டும் சிந்தனையே சிக்கனம். பணத்தை சேமிப்பது ஒரு விரும்பத்தக்க விளைவேயன்றி அது நமது குறிக்கோள் அல்ல.

நமது செயல்களை ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து, அவற்றில் சிறந்த செயல்களை தெளிவான அறிவுடன் தேர்ந்தெடுக்கவேண்டும்.

தனிமனித பொருள்வளம் குறித்தும் சிக்கனம் குறித்தும் சில கேள்விகள்:

 1. உங்கள் உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சி கூடத்தில் சேர முயற்சிப்பீர்களா அல்லது உடல் எடை குறைய நாம் உண்பதை விட அதிகம் செலவாகும் என்பதை உணர்வீர்களா? உடற்பயிற்சி உங்கள் பசியை தூண்டி நீங்கள் அதிகம் உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
 2. கைபேசி என்பது தொலைதொடர்பு சாதனம் என கருதுவீர்களா அல்லது கைபேசியில் அனைத்து நவீன வசதிகளும் இருக்க வேண்டும் என யோசிக்கின்றீன்களா?
 3. உங்கள் குழந்தையின் பிறந்த நாளை வெகு விமர்சையாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடுவீர்களா அல்லது உங்கள் குழந்தையை அவனுக்கு/அவளுக்கு பிடித்த பொம்மையை வாங்க பணம் சேமிக்க சொல்வீர்களா?
 4. தொலைக்காட்சி பார்க்க நேரமில்லாத போதும், நமக்கு கிடைக்கும் பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் உயர் தெளிவுத்திறன் (High Definition) பெறாத போதும், நீங்கள் முழு உயர் தெளிவுத்திறன் (Full HD) தொலைக்காட்சி பெட்டியை வாங்க விரும்புகிறீர்களா?
 5. உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காகவே நீங்கள் சில செயல்களை செய்கிறீர்களா அல்லது அந்தச்செயல் அத்தியாவசமான செயல் என்றால் மட்டுமே செய்வீர்களா? அறிவுக்கு பொருந்தாத சமூக அழுத்தம் நமது மனநிறைவுக்கு மிகப்பெரிய எதிரி.

இப்பட்டியல் முடிவில்லாத ஒன்று. இவற்றின் மூலம் ஒரு தெளிவான கருத்து புலப்படுகிறது.

தெளிவான கருத்து:

 • உங்கள் தேவைகளை/ஆசைகளை அறிந்துகொள்ளுங்கள் (ஓய்வுக்கால சேமிப்பு, குழந்தைகளுக்கான தேவைகள், சுற்றுலா, வீடு, வாகனம், மற்றும் பல)
 • இவற்றுள் உங்கள் ஆசைகளை தனியாகப் பிரிக்கவும்.
 • முதலில் உங்கள் தேவைகளுக்காக முடிந்த அளவிற்கு முதலீடு செய்யவும்.
 • இதனால் ஒரு துறவியைப் போல வாழப்போகிறீர்கள் என்று அர்த்தமல்ல. அவ்வப்போது உங்கள் ஆசைகளையும் நிறைவேற்றுங்கள் (20 களில் உள்ளவர்கள் கூறும் கருத்தும் ஏற்புடையதே).
 • சிக்கனமாக வாழ, உங்களையும், உங்களையும் புரிந்து கொண்டு நடக்கும் வாழ்க்கைத்துணையும் மிகவும் முக்கியம். இதைப்பொறுத்த மட்டில் நான் பாக்கியசாலி.

இந்த அணுகுமுறை,உங்கள் மனம் அமைதி பெற, ஒரு தியானத்தைப் போன்றது. இன்று, எனது மாத சம்பளத்தில் 60% வரை என்னால் சேமிக்க முடிகிறது. இந்த சேமிப்பு சரியாக முதலீடு செய்யப்பட்டால், எனது ஓய்வுக்கால செலவுகள், எனது மகனின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை செய்திட இது உதவும். எனக்கும் ஒரு பெரிய வீடு வாங்க வேண்டும் என்ற கனவு உண்டு. ஆனால், நான் அதனை வாங்க முடியாது என்றே நினைக்கிறேன். உங்கள் கனவுகளையும் உங்கள் இலக்குகளையும் பகுத்துப் பார்க்கும் பக்குவமும் சிக்கனத்தின் ஒரு பகுதியே.

என்னைப் பொறுத்தமட்டில், சிக்கனம் என்பது ஒரு அத்தியாவசிய தேவை. நான் சிக்கனமாக இல்லாவிடில், என்னால் போதுமான அளவிற்கு சேமிக்க முடியாது. நீங்கள் எப்படி?

இரண்டற கலந்த ஒன்று.

சிக்கனம் ஏன் தனிமனித பொருள்வளத்தின் ஆதாரக்கல்லாக திகழ்கிறது?

முதலீடுகள் எப்பொழுதும் இலக்கு சார்ந்ததாக இருத்தல் அவசியம். இலக்குகள் இல்லாமல் முதலீடு செய்ய முற்பட்டால், நாம் சரியாக முதலீடு செய்ய மாட்டோம். அதிகமாக செலவு செய்யவும் வாய்ப்புகள் அதிகம். மேலும், ஒரு மனிதன், இலக்குகள் இல்லாமல் இருப்பதும் அரிது.

உங்கள் இலக்குகளுக்காக எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும் என வைத்துக்கொண்டாலும், உங்கள் அனைத்து இலக்குகளையும் பூர்த்திசெய்யும் அளவிற்கு போதுமான அளவு சம்பாதிக்கின்றீர்களா?

இந்தக் கேள்விக்கு பெரும்பாலோரின் பதில் கிட்ட தட்ட அல்லது இல்லை என்பதாகவே இருக்கும். அதனால், உங்கள் சம்பாதிக்கும் திறன் குறைந்து இருக்கும்பொது, நீங்கள் உங்கள் செலவீனங்களை குறைக்க வேண்டும். அப்படியே நீங்கள் போதுமான அளவு சம்பாதித்தாலும், நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத்தரம் அதிரடியாக உயராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்யாவிடில் உங்கள் முதலீடுகள் ஈட்டும் பொருள்வளம், உங்கள் ஓய்வுக்கால செலவுகளை முழுவதும் ஈடுகட்ட முடியாமற்போகும்.

தங்களுடைய 20 களில் மற்றும் 30 களில் இருக்கும் மக்கள் வாழ்க்கைத்தரம் குறித்து கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், அவர்களின் சம்பளத்தைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனால் உங்கள் முதலீடுகளை தள்ளிப்போட வேண்டும் என்று பொருள் அல்ல.

உங்கள் வாழ்க்கைத்தரம் நிலையாகும் வரை உங்கள் ஓய்வுக்காலத் தேவைகளை தொடர்ந்து மறுமதிப்பீடு செய்யவேண்டும். மேலும், சிக்கனம் மற்றும் நிதித்திட்டமிடல் குறித்த அடிப்படை புரிதல் உங்களுக்குப் பெரிதும் உதவும்.

இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவம் மார்ச் 12, 2012 அன்று Wealth Wisher வலைப்பதிவில்  இடம்பெற்றது.

This page is the Tamil translation of Frugality: The Cornerstone of Personal Finance.

ஆசிரியர்: freefincal

மொழிபெயர்ப்பாளர்: Venkatesh Jambulingam

4 replies on “சிக்கனம்: தனிமனித பொருள்வளத்தின் ஆதாரக்கல்”

 1. Excellent. Quick question (not sure if you are going to see it or not). Have you ever tried gingili oil (Nalla ennai) instead of olive oil? Most of the western products are just promoted to help their farmers. Best example Oranges. Lots of money spent on health benefits about orange juice 10/20years back, only to find out tons of sugars in that. Even I used to drink tons of it earlier, not anymore. Nalla ennai was used by our parents or grand parents before all these and they were healthy. Just a thought. Also it will help our farmers and local economy.

  1. Thank you. Will see it all right as it is a sub-directory of freefincal. Whichever the oil, one will have to use in moderation. One doctor suggested using a blend oil or changing oil frequently. So Nalla ennai is part of the rotation.

Comments are closed.