புதிய வீடியோ பதிப்புகள்

கீழ்க்கண்ட வீடியோ பதிப்புகள் என்னுடைய யூடியூப் சேனலில் வெளியானவை இவை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருடன் பகிரவும்


Children’s மியூச்சுவல் ஃபண்ட் – இவ்வகை ஃபண்ட்கள் தேவையா?

ஆதித்ய பிர்லா நிறுவனம் புதிதாய் ஒரு ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. பால பவிஷ்ய யோஜனா என்ற இந்த ஃபண்ட் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஃப்ண்ட் என்கிறது அந்நிறுவனம். இவ்வகை ஃபண்ட்கள் தேவையா?

ஆசிரியர் அறிமுகம்
பாஸ்டன் ஸ்ரீராம் –  சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், தில்லியில் ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தபின் 2002 முதல் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அருகில் இருக்கிறார். தில்லியின் IIFT இன் Executive Masters in International Business  பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் ஒரு மென்பொருள் கன்சல்டன்சியில் வைஸ் ப்ரெசிடெண்டாக பணி புரிகிறார்.
தனிநபர் சேமிப்பு, முதலீடு, ஆயுள் காப்பீட்டுத் துறைகளில் பெரும் ஆர்வம்  கொண்டவர். தமிழில் கொண்ட ஆர்வம் காரணமாக சோசியல் மீடியாவில் பெரும்பாலும் தமிழில் எழுதி வருகிறார். 25 ஆண்டுகால முதலீட்டு அனுபவத்திலும் படிப்பதன் மூலமும் தான் அறிந்து கொண்டவற்றை பிறருக்கு பயனளிக்கும் வகையிலும் ஃபேஸ்புக்கிலும் பத்திரிக்கைகளிலும் கட்டுரைகளாக எழுதிவருகிறார். இவர் கட்டுரைகள் பெரும்பாலும் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்  பற்றியே இருக்கும். இவரை bostsonsriram [at] gmail [dot] com  என்ற மின்மடலில் தொடர்பு கொள்ளலாம்

ஐஐடிக்கு கட்டணம் 1.78 லட்சத்திலேருந்து 12 லட்சமாச்சு, மெடிக்கல் எண்ட்ரன்ஸுக்கு செலவு 2.3 லட்சத்திலேருந்து 12 லட்சமாச்சு என்றெல்லாம் பயமுறுத்திவிட்டு 10,000 ரூபாய்  மாதாந்திர முதலீடு 20 ஆண்டுகள் கழித்து  10% வளர்ச்சியில் 76 லட்சமாகும் 15% வளர்ச்சியில் 1.5 கோடியாகும் என்றெல்லாம் படம் காட்டுகிறது இத்திட்டத்தின் கையேடு. கண்ணில் பட்ட இடமெல்லாம் தேடி விட்டேன், திட்டத்தின் தனித்துவம் என்று எதையும் சொல்லவேயில்லை.  என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு நல்ல காரணம் கூட எனக்குத் தென்படவேயில்லை.

பாப்பா பேர்ல ஒண்ணு பையன் பேர்ல ஒண்ணுன்னு ரெண்டு பாலிசி போட்டுடலாம் சார் என்கிற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் லெவலுக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் வந்திருப்பது பெரும் சோகம். எச் டி எஃப் சி, ஆக்சிஸ், யூடிஐ, எஸ்பிஐ மேக்னம் ஏன் எல் ஐ சி மியூச்சுவல் ஃபண்ட் கூட சில்ட்ரன்னு பேர் வச்ச் ஃபண்ட் வச்சிருக்கு நமக்கும் ஒண்ணு இருக்கட்டும்னு ஆரம்பிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்.

சேமிப்பும் முதலீடும் இன்றியமையாதவை. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. பிள்ளைகள் கல்லூரிப் படிப்புக்கு சேமித்தே ஆகணும், அதற்கு நீண்ட கால சந்தை முதலீடுதான் என் சாய்ஸும் – ஆனால் அதற்காக இப்படி ஒரு தனி ஃபண்டில் முதலீடு செய்யத் தேவையில்லை. அனைத்து சேமிப்பு மற்றும் முதலீட்டு ஆலோசகர்களும் சொல்றா மாதிரி டைவர்சிஃபைட் போர்ட்ஃபோலியோ இருந்தால் போதும் (லார்ஜ் கேப், மிட் கேப், கடன் பத்திரங்கள் கொண்டவை) – இவை தவிர படிப்புக்கு ஒரு ஃபண்ட், மருத்துவச் செலவுக்கு ஒரு ஃபண்ட், சாப்பாட்டுக்கு, உடைக்கு, சாவு செலவுக்குன்னு தனித்தனியா ஃபண்ட்கள் தேவையில்லை. வரிவிலக்கு போன்ற சிறப்பு காரணங்கள் கொண்ட ஃபண்ட்கள் விதிவிலக்கு

படிப்புக்காக சேமிக்கும் சிறப்பு ஃபண்ட் என்று சொல்கிறார்களே, அப்படி என்ன இருக்குன்னு பாத்தா புழக்கத்தில் இருக்கும்  அக்ரசிவ் ஹைப்ரிட் மற்றும் கன்சர்வேடிவ் ஹைப்ரிட் ஃபண்ட்கள்தான், ப்ரத்யேகமான அம்சங்கள் ஏதுமில்லை.

எவ்விதச் சலுகையும் இல்லாமல் 5 ஆண்டுகள் லாக் இன் ப்ரீயட் கொண்ட ஒரு ஃபண்டில் முதலீடு செய்வது அர்த்தமற்றது. நீண்ட காலம் ஒரு ஃபண்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற வாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலீடு செய்துள்ள ஃபண்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்றாலோ, அந்த கேட்டகரியில் வேறு ஃபண்ட்கள் இதை விட சிறப்பாக செயல்படுவதைப் பார்த்தாலோ, முதலீட்டு வேறு ஃபண்ட்களுக்கு மாற்றும் திறம் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும்.

பிள்ளைகள் படிப்புக்கான சேமிப்பு, நாமே நினைத்தாலும் 5 ஆண்டுகளுக்கு பணத்தை எடுக்க முடியாது என்கிற உளவியலை வைத்து ஃபண்டை சந்தைப்படுத்த நினைக்கிறது ஆதித்ய பிர்லா நிறுவனம். இதில் முதலீடு செய்வதை விட லாக் இன் பீரியட் இல்லாத, 5 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாக செயல்படும், கட்டணம் கம்மியாக இருக்கும் வேறொரு அக்ரெசிவ் ஹைப்ரிட் ஃபண்டில் முதலீடு செய்வது நலம்

குறிப்பிட்ட நாளை எதிர்பார்த்து சேமிக்கும் ஃப்ண்ட்களை டார்கெட் டேட் ஃபண்ட் என்பார்கள் – ரிட்டையர்மெண்ட், கல்லூரிச் செலவு போன்றவை எந்தாண்டு வரும் என்று பெரும்பான்மையானோர் சொல்லிவிடுவார்கள். 15 ஆண்டுகள் கழித்து வரும் கல்லூரிச் செலவுக்கோ 30 ஆண்டுகள் கழித்து வரும் ரிட்டையர்மெண்டுக்கோ சேமிக்கும் ஃபண்ட்கள் ஆரம்பத்தில் அதிக ஈக்விட்டி, கம்மி பாண்ட் என்று ஆரம்பித்து ஈக்விட்டி குறைந்து கொண்டே வரும். டார்கெட் டேட் அருகில் வரும்போது பெரும்பான்மை பாண்டிலும் சிறிய அளவு ஈக்விட்டியிலும் இருக்கும். அடுத்தாண்டு கல்லூரிக்கு பணம் வேணும் என்ற போது 80% ஈக்விட்டியில் பணத்தை வைப்பது நல்லதல்ல.

அமெரிக்காவில் 529 ப்ளான் என்று பிள்ளைகள் படிப்புக்குச் சேமிக்கும் திட்டம் இருக்கு. அதில் செய்யும் முதலீட்டை படிப்புச் செலவுக்கு மட்டுமே உபயோகிக்க முடியும். பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லும் போது ஃபண்ட் நிறுவனம் நேரடியாக கல்லூரிக்கு பணத்தை அனுப்பும். 2011இல் பிறந்த மகள் படிப்புக்கு நான் சேமிக்க நினைத்தால் 80% ஈக்விட்டியிலும் 20% பாண்டிலும் ஆரம்பித்து அவளுக்கு 16-17 வயதாகும் போது அப்படியே தலைகீழாகிடும். 80% பாண்டிலும் 20% மட்டுமே ஈக்விட்டியிலும் இருக்கும். மேலும் இதில் செய்யும் முதலீட்டுக்கு வருமானவரி விலக்கும் கிடைக்கும்.

இதைப் போன்ற ஒரு திட்டமே இந்தியாவிற்குத் தேவை – இப்போதிருக்கும் சில்ட்ரன்ஸ் ஃபண்ட் என்ற போர்வையில் இருக்கும் ஹைப்ரிட் ஃபண்ட்கள் அல்ல.

இந்த மாற்றத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மட்டும் கொண்டு வந்து விடமுடியாது. மத்திய அரசு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும், வருமானவரி விலக்கு வழங்க வேண்டும். கல்லூரிகளும் கருப்புப் பணமின்றை முழுக் கட்டணத்தையும் முறைப்படி வாங்க முன்வரவேண்டும். அதுவரை எல்லா சில்ட்ரன்ஸ் ஃபண்ட்களும் பத்தோடு ஒன்று பதினொன்று ஹைப்ரிட் ஃபண்ட்களே.

மருத்துவ காப்பீடு (Health insurance) வாங்குவது எப்படி? – பணமயமான எதிர்காலம் – நான்காம் படி

பணமயமான எதிர்காலம் – இரெண்டாம் படி: பணம் சேர்க்க தேவையான அடித்தளம்

வணக்கம் நான் என்னுடைய “Re-assemble: a series of basic money management steps for beginners” தமிழாக்கம் செய்ய  தொடங்கியுள்ளேன். இது  இரெண்டாம் பகுதி. நீங்கள் விரும்பினால், உங்கள் தொடர்புகளுடன் இதை பகிர்ந்து கொள்ளவும். நன்றி

 

பணமயமான எதிர்காலம் – முதற் படி

வணக்கம் நான் என்னுடைய “Re-assemble: a series of basic money management steps for beginners” தமிழாக்கம் செய்ய  தொடங்கியுள்ளேன். இது முதல் பகுதி. நீங்கள் விரும்பினால், உங்கள் தொடர்புகளுடன் இதை பகிர்ந்து கொள்ளவும். நன்றி

பங்குசார் பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து எப்போது வெளியேற வேண்டும்?

இந்த இடுகையில், பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து வெளியேறும் உத்திகள் பற்றி விவாதிக்கலாம். குறிப்பாக, “எப்போது நான் ஒரு பங்குசார் பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும்” என்ற அடிக்கடி கேட்கப்படும் கேள்வி குறித்து விவாதிப்போம்.

ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தில் இருந்து எப்போது வெளியேற வேண்டும் என தெரிந்து கொள்ள, ஒரு முதலீட்டாளர் தங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீடுகளை எவ்வாறு மதிப்பாய்வு செய்வது என்று புரிதல் அவசியம் வேண்டும். இதற்கு முந்தைய இடுகையில், (உங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்வது எப்படி?) தனிப்பட்ட தரக்குறிகளின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் சரியாக இலாபம் ஈட்டாத நிதித்திட்டங்களை கண்டறிவது குறித்தும் விவாதித்தோம். அந்த இடுகையில் எனது கவனம், பங்குசார் தொகுமுதலீட்டின் நிகர XIRR-ஐ கருத்தில் கொண்டு ஒரே பிரிவின் கீழ் உள்ள நிதித்திட்டங்களை எப்படி நீக்குவது என்றாகவே இருந்தது.

இந்த இடுகையில், ஒரு எளிய தொகுமுதலீடு உள்ளது என்ற ஊகத்திலும், அவற்றில் உள்ள நிதித்திட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தது என்ற ஊகத்திலும், ஒரு குறிப்பிட்ட நிதித்திட்டத்தில் இருந்து வெளியேறும் உத்திகள் பற்றி விவாதிக்கலாம்.

உங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டிற்கு ஒரே பிரிவில் புதிய நிதித்திட்டத்தை தேர்ந்தெடுப்பது அல்லது ஏற்கனவே இருக்கும் நிதித்திட்டத்தை மதிப்பாய்வு செய்வது என, பல தீர்வுகள் உள்ளன. இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பது முற்றிலும் தோரயமானவை ஆகும். கீழ்காணும் தகவல், ‘நான் என்ன செய்வேன்’ என்பதை விளக்குகிறது. இதை எழுதுவதற்கு என்னுடைய ஒரே தகுதி என்னவென்றால், என்னுடைய செயல்முறையை என்னால் நியாயப்படுத்த முடியும்.

(அ) நிர்வகிக்கப்பட்ட பரஸ்பர நிதித்திட்டங்கள் எளிதில் வரையறை செய்ய இயலாத ஜந்துக்கள் போன்றைவை. ஒவ்வொரு பரஸ்பர நிதி நிறுவனமும் ஒவ்வொரு நிதித்திட்ட நிர்வாக குழுவும் வித்தியாசமான நிர்வாக உத்திகளை கொண்டிருக்கும். சில நிதித்திட்டங்கள் தங்கள் தொகுமுதலீட்டை தலைகீழாக மாற்றலாம். சில நிதித்திட்டங்கள் வாங்காமல் / விற்காமல் இருக்கலாம். இந்த முடிவுகள் நிதித்திட்டத்தின் மொத்த அளவு / பண வரவை சாராமல் இருக்கலாம். சந்தை கண்ணோட்டத்தைப் பொறுத்து, நிதி நிர்வாக பாணி அல்லது உறுதிப்பாடு சார்ந்து அது இருக்கலாம்.

எனவே, ஆண்டுதோறும் ஒரு பங்குசார் பரஸ்பர நிதித்திட்டம் தன் பிரிவின் தரக்குறியை வீழ்த்தி மற்றும் / அல்லது தன் பிரிவில் உள்ள மற்ற நிதித்திட்டங்களை வீழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சற்றே பக்குவமற்றது. எனது நிதித்திட்ட நிர்வாகிகளுக்கு நான் நிறைய இடம் தருவேன். சந்தை நிலைமைகளைப் பொறுத்து, Alpha – வை உற்பத்தி செய்வதற்கு (சந்தை தரக்குறியை வீழ்த்துவதற்கு), 3 முதல் 5 ஆண்டுகளுக்கு காத்திருக்க ஆயத்தமாகியுள்ளேன்.

நான் ஒரு நீண்ட கால முதலீட்டாளர். குவாண்டம் நீண்ட கால பங்குசார் நிதித்திட்டத்தின் ரொக்க இருப்பு பற்றி நான் கவலைப்படுவதில்லை. பக்கவாட்டான சந்தையில் (sideways market), தவற விட்ட மேல் நேர்மறை (upside opportunity) வாய்ப்புகளை, எதிர்மறை பிடிப்பு விகிதம் (downside protection) பாதுகாப்பு முறைகள் மூலம் ஈடுகட்டலாம்.

Alpha – வை ஒரே இரவில் உருவாக்க இயலாது. பங்கு முதலீடு, பெரும்பாலான நேரம், காத்திருக்கும் விளையாட்டு ஆகும். சந்தை முன்னேறி செல்லாத பொது முதலீட்டை தொடர்ந்து சந்தையில் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது நம் மூலதனத்தை அதிகரித்து பெரிய வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும். பொறுமையாக காத்திருக்கும் நபர்களுக்கு பெரிய அளவில் இலாபம் கிடைக்கும். என் இலக்குகள் காத்திருக்க அனுமதிக்கும் வரை, பொறுமையாக காத்திருக்க நான் தயாராக இருக்கிறேன்.

(ஆ) ஆய்வாளர்கள் கருத்தை அல்லது நட்சத்திர மதிப்பீட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அண்மையில் வெளியிடப்பட்ட S & P 500 மற்றும் BSE சென்செக்ஸின் டாலர் விலை சராசரியாக்கம் (Dollar Cost Averaging) அதாவது இடைவிடா முதலீடு திட்டம் (Systematic Investment Plan – SIP) என்ற ஆய்வின் மிக முக்கியமான படிப்பினை, பங்கு வர்த்தகத்தின் இலாபம்/ வருவாய் நீங்கள் முதலீடு செய்த கால அளவை பொருத்தது. நீங்கள் ஒரு நிதித்திட்டத்தை பகுப்பாய்வு செய்யத் தொடங்கும்போது இது பொருந்தும். நீங்கள் பதிவு செய்துள்ள வருமானமும், நட்சத்திர மதிப்பீடுகள் மென்பொருள் பதிவு செய்த வருமானமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இதனை மூன்று குருடர்கள் ஒரு யானையை தொட்டு உணர்வதோடு ஒப்பிடலாம்.

நான் இப்போது 23% XIRR-ஐ கொண்ட இரண்டு நட்சத்திர நிதித்திட்டம் வைத்திருக்கிறேன். அத்தகைய வருமானம் போதுமானதல்ல என்றும், ஒரு ஐந்து நட்சத்திர நிதித்திட்டதிற்கு மாறாமல் வருமானம் இழந்துவிட்டேன் என்று எண்ணுவது சிறுபிள்ளைத்தனம்.

(இ) கடந்த சில ஆண்டுகளாக “சும்மா இருத்தல்” -ன் (‘Doing nothing’ – யார் இந்த சொற்கூற்றை உருவாக்கியது என்று தெரியவில்லை) முக்கியத்துவம் உணர்ந்து பாராட்ட விழைகிறேன். இன்று 8 ஆண்டுகளுக்குப் பிறகு, என் ஓய்வூதியத் தொகுமுதலீட்டின் நிகர XIRR 18.7% ஆகும். நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு, இதே XIRR-ஐ பெற முடியும் என்றால், நான் நிதி சுதந்திரம் அடைந்திருப்பேன்.

எனது தொகுமுதலீட்டில் 88% க்கும் அதிகமான பரஸ்பர நிதித்திட்டங்கள் ஒவ்வொன்றும் 18.7% க்கு மேலான XIRR-ஐ பெற்றுள்ளது. *18.7% XIRR க்குக் கீழே உள்ள 12% பரஸ்பர நிதித்திட்டங்களை வெளியேற்றுவதற்கு எனக்கு எந்த காரணமும் இல்லை. இது ஒரு கணிசமான எண்ணிக்கையிலானதாக இருந்தாலும் கூட (நீண்ட காலமாக தொடர்ந்தது), நான் எதையும் செய்யவில்லை. காத்திருக்க வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன்.

(*) XIRR கால அளவு மற்றும் மூலதனம் பொருத்தது.

கூற வரும் கருத்து, ஒரு தொகுமுதலீட்டின் நிகர XIRR அடிப்படையில் தனிப்பட்ட தரக்குறி கொண்டிருந்தாலும், குறைந்த வருமானம் தரும் சில நிதித்திட்டங்கள் இருந்தால் உடனடியாக செயல்பட கூடாது மேலும் அது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். இது தற்காலிகமாக இருக்கலாம். சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, நிகர XIRR மற்றும் குறைந்த நிதித்திட்டத்தின் XIRR இடையிலான வித்தியாசம் 12% ஆக இருந்தது. இன்று 3% மட்டுமே. சும்மாயிருத்தல் அதிகம் உதவுகிறது.

(ஈ) நான் ஒரு மாற்றம் அவசியம் என்று நான் நம்புகிறேன் என்றால், நான் ஒரு நிதித்திட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உறுதிப்பாடோடு இருந்தால், என் நிதித்திட்டத்தின் செயல்திறனை அதன் தரக்குறி மற்றும் என் முதலீட்டு கால அளவு அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும். அதாவது, நான் முதலீடு செய்த தேதிகளுக்கு இடையே. இதற்கு உதவும் சில கருவிகளை ஆராயலாம்.

உங்கள் ரொக்க முதலீடுகள் உங்கள் நிதித்திட்டங்களில் எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளது என்பதை கண்டறிய பல் குறி பரஸ்பர நிதித்திட்ட சுழல் முறை இலாபக் கணிப்பேடு.

இடைவிடா முதலீடு திட்டம் மாத மாதம் எவ்வாறு செயலாற்றியது என்று அறிய பரஸ்பர நிதித்திட்ட இடைவிடா முதலீடு திட்டம் இலாபக் கணிப்பேடு.

கூடுதலாக, ஆண்டாண்டு மறையிடர் சரி செய்யப்பட்ட செயல்திறன் பகுப்பாய்வை ஒவ்வொரு வருடமும் நீங்கள் செய்யலாம்.

ஆண்டாண்டு பரஸ்பர நிதி மறையிடர் மதிப்பீட்டு கணிப்பேடு

அல்லது வெவ்வேறு முதலீட்டு கால அளவிற்கு:

பதிப்பு 4.0 – பரஸ்பர நிதி மறையிடர் மற்றும் இலாபக் கணிப்பேடு

கூடுதலாக, நடப்பு சந்தை நிலைமைகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு, நிதித்திட்ட நிர்வாக முறை மற்றும் முதலீட்டு பாணி மாறியுள்ளனவா எனவும் நான் காண வேண்டும்.

நிதித்திட்டம் சரியாக செயல்பட்டாலும் இல்லாவிடினும், முதலீட்டு பாணி மாறினால் நாம் கவலை கொள்ள வேண்டும். இங்கே ‘இல்லாவிடின்’ என்பது மிகவும் தோரயமானதாகும். நியாயமான/எதார்த்த போக்கு எப்போதும் உதவுவதாக நான் நினைக்கிறேன்.

நிதித்திட்ட நிர்வாகி மாறும் அதே வேளையில், நிதித்திட்டத்தின் செயல்திறன் குறையும் போது, அது ஒருவேளை எச்சரிக்கை அறிகுறி இருக்ககூடும். இருப்பினும், புதிய நிதித்திட்ட நிர்வாகிக்கு நியாயமான நேரத்தை வழங்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மீண்டும் ‘நியாயமான நேரம்’ தோரயமானதாகும்! உதாரணமாக, பரஸ்பர நிதித்திட்ட மதிப்பாய்வு: ரிலையன்ஸ் வளர்ச்சி நிதித்திட்டம் எடுத்துக்கொள்வோம்.

ஜூன் 2008 மற்றும் பிப்ரவரி 2014 க்கு இடையில், இந்த நிதித்திட்டம் ஒரு குறியீட்டு நிதித்திட்டம் போல செயலாற்றியது. அதனால் நான் ‘வெளியேறலாம்’ என்று சொன்னேன். அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு, யூனிட் ஒன்றுக்கு ₹700 NAV என்ற சாதனை அளவை எட்டியது. எனவே இந்த விடயங்களை கணிப்பது கடினமாக உள்ளது. என் ‘வெளியேறும்’ முடிவில் உறுதிப்பாடோடு இருக்கிறேன். ரிலையன்ஸ் வளர்ச்சி நிதித்திட்டம் அதன் திடீர் புகழ் காரணமாக உள் வரும் ரொக்கத்தை கையாள்வதில் சிக்கல் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

நாம் முதலீடு செய்யும் நிதி திடீரென பிரபலமாகிவிட்டால், அது ஒரு எச்சரிக்கை அறிகுறி என்று நான் நினைக்கிறேன். இது ஒரு பெருமுதல் அல்லது நடுமுதல் நிதித்திட்டம் என்றால், நடு மற்றும் சிறுமுதல் நிதித்திட்டம் போன்று கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. குறைந்த அளவு கவலை/எச்சரிக்கை போதுமானது. இருப்பினும், புதிய நிதித்திட்ட நிர்வாகிக்கு நியாயமான நேரத்தை வழங்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

 

சில நேரங்களில் நீண்ட கால இறங்கு முக சந்தையில், நிதித்திட்ட நிர்வாகி தனது தேர்வு/முடிவில் உறுதிப்பாடோடு நிற்கலாம்.  அப்படி இருந்தால், முதலீட்டாளர் காத்திருக்க வேண்டும், ஆனால் இதுகுறித்து நிர்வாகத்திடம் பேசாமல் முடியவில்லை என்றால் இதை அறிந்துகொள்ள வேறு வழி இல்லை.

பொழிப்புரை:

(1) உங்கள் நிதித்திட்டத்திற்கு நியாயமான நேரத்தை கொடுங்கள்.

(2) மற்ற குறுகிய அல்லது நீண்ட காலத்திற்கு அல்லாமல், உங்கள் முதலீட்டு காலத்திற்காக மட்டுமே செயல்திறனை ஆராய்ந்து பார்க்கவும்.

(3) தொடர்ச்சியான குறைந்த செயல்திறன் இருந்தால், அதன் காரணத்தை நிர்ணயிக்கவும். (புதிய மேலாண்மை, திடீர் ரொக்க முதலீடு, நீடித்த இறங்கு முக சந்தை போன்றவை)

(4) நிதித்திட்டத்தை வைத்துக்கொள்ள அல்லது வெளியேற்ற ஒரு முடிவெடுக்கவும். என்ன முடிவானாலும் சரி, வருத்தப்பட வேண்டாம். உங்கள் குறிக்கோளின் பொருள் தேவையில் கவனம் செலுத்துங்கள். இலாபத்தை மையமாகக் கொண்டு அல்ல.

(5) மற்றவர்களுடன் உங்கள் வருமானத்தை ஒப்பிடாதீர்கள்.

(6) ஆதாரம் இல்லாமல், ‘மற்றொரு சிறந்த வழி உண்டு’ என்று மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம். பரஸ்பர நிதி முதலீடுகள் ஏவுகணை விஞ்ஞானமாக சித்தரிக்கப்படுவதால் தான் நிதி சேவைகள் தொழிற்துறை வளர்கிறது.

(7) யோசிக்காமல் நிதித்திட்டங்களை மாற்றி அதன் மூலம் வருவாய் அதிகரிக்க செய்யும் முயற்சி வெளிப்படையாகவே வேடிக்கையான ஒன்று.

(8) ஒரு வருடத்திற்கு ஒருமுறை தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்யவும். மதிப்பாய்வு செய்தல் என்றால் நிதித்திட்டங்களை மாற்ற வேண்டும் என்று பொருள் அல்ல!

மேலும் பார்க்கவும்: உங்கள் பரஸ்பர நிதி இடைவிடா முதலீடு திட்டங்களை எவ்வாறு மதிப்பாய்வு செய்வது?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

This post is the Tamil translation of When should I exit an equity mutual fund?

ஆசிரியர்: திரு. பட்டாபிராமன்

மொழிபெயர்ப்பாளர்: திரு. வெங்கடேஷ்

உங்கள் பரஸ்பர நிதி இடைவிடா முதலீடு திட்டங்களை எவ்வாறு மதிப்பாய்வு செய்வது?

உங்கள் மாத மாத வருமானத்தை கண்காணிப்பதன் மூலம் உங்கள் பரஸ்பர நிதி இடைவிடா முதலீடு திட்டங்களை (Systematic Investment Plan – SIPs) மதிப்பாய்வு செய்யும் எளிய வழிமுறை விவாதிக்கப்படுகிறது.

முந்தைய இடுகையில், 10 வருட இடைவிடா முதலீடு திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் பெரும் பரவலைக் கொண்டிருந்தன. பகுப்பாய்வு: 10-ஆண்டு இடைவிடா முதலீடு திட்ட வருமானம் Vs 10 ஆண்டு ரொக்கத்தொகை முதலீடு.

பரஸ்பர நிதித்திட்ட விநியோகஸ்தர்களால் உங்கள் ‘முதலீடு ஒழுங்குமுறை’க்காக மட்டுமே இலாபம் ஈட்டும் என்று சந்தைப்படுத்தப்படும் இடைவிடா முதலீடு திட்டங்களை வெறுமனே நம்பிக்கை அடிப்படையில் அனுமதிக்கக் கூடாது என்று அந்த இடுகையில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

இந்த இடுகையில், ஒரு பல்முதல் (Multi-Cap: Value Research இணையதளம் விளக்கத்தின் படி) பங்குசார் பரஸ்பர நிதித்திட்டத்தின் 10-வருட இடைவிடா முதலீட்டின் வருமானத்தை கருத்தில் கொள்வோம்.

தொகுப்பு A-வில் ஐசிஐசிஐ வேல்யு டிஸ்கவரி நிதித்திட்டம் (ICICI Value Discovery Fund) மட்டுமே உள்ளது. இந்த திட்டம் ஒரு விதிவிலக்கு ஏனெனில் இது நடுமுதல் திட்டத்திலிருந்து இருந்து பல்முதல் திட்டமாக மாறியது. எதிர்காலத்தில், ஒரு பெருமுதல் திட்டத்தை நோக்கி நகரும் என்று சமீபத்தில் சங்கர் நரேன் தெரிவித்தார்.

தொகுப்பு  Fல், 5 நிதித்திட்டங்களை தவிர அனைத்து நிதித்திட்டங்களும் கடந்த 10 ஆண்டுகளில் இரட்டை-இலக்க இடைவிடா முதலீடு திட்ட வருமானத்தை பெற்றுள்ளன. இத்தகைய நிலை மோசமானதல்ல. மற்ற பிரிவுகள் பரிசீலிக்கப்பட்டால், தொகுப்பு  FG மற்றும் H ஆகியவற்றில் அதிகமான நிதித்திட்டங்கள் இருக்கும்.

உங்கள் இடைவிடா முதலீடு திட்ட துவக்கத்திலிருந்து மாத மாத வருமானம், அதன் தரக்குறியோடு ஒப்பிடும்போது எவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய ‘பரஸ்பர நிதி இடைவிடா முதலீடு திட்ட XIRR கண்காணிப்பான்’-ஐப் பரிந்துரைக்கிறேன்.

எந்தவொரு பரஸ்பர நிதித்திட்ட மதிப்பாய்வுக்கும் இது முக்கியமாகும். நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கிய நாளிலிருந்து நிதித்திட்ட செயல்பாட்டை நீங்களே தீர்மானிக்கவும். நட்சத்திர மதிப்பீடுகள் ஏதோ இரண்டு தன்னிச்சையான / சம்பந்தமில்லாத தேதிகளுக்கு இடையே உள்ளன.

உதாரணம்: IDFC பிரீமியர் ஈக்விட்டி நிதித்திட்டம் என்பது ஒரு நடுமுதல் நிதித்திட்டம் ஆகும் (எனவே நான் இங்கே தரவை வழங்க விரும்பவில்லை). ஏப்ரல் 2006-ல் தொடங்கப்பட்ட ஒரு இடைவிடா முதலீடு திட்டத்தை மதிப்பாய்வு செய்ய மேலேயுள்ள கண்காணிப்பானை பயன்படுத்தவும். ஒவ்வொரு மாதமும் அந்த நிதித்திட்டம் அதன் தரக்குறியை விட சிறப்பாக செயல்பட்டு உள்ளதை  நீங்கள் காண்பீர்கள் ! இருப்பினும், அதன் தற்போதைய நட்சத்திர மதிப்பீடு 3 நட்சத்திரம் மட்டுமே. நட்சத்திர மதிப்பீடுகள் = இரைச்சல்.

இப்போது, மேலே உள்ள கண்காணிப்பானில் இருந்து ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள ஒரு நிதித்திட்டதிற்கு எடுக்கப்பட்ட திரைப்பிடிப்புகளை (Screenshots) காண்போம்.

தொகுப்பு A

தொகுப்பு B

தொகுப்பு C

தொகுப்பு D

தொகுப்பு E

 

 

தொகுப்பு F

கடைசி இரண்டு ( E, F ) தொகுப்புகளைத் தவிர, ஒவ்வொரு தொகுப்பிலும் தேர்வு செய்யப்பட்ட நிதித்திட்டம் தங்களது தரக்குறியை நியாயமான முரண்பாடற்ற முறையில் வீழ்த்தியுள்ளன.

தன் இடைவிடா முதலீடு திட்ட வருமானத்தில் ஒரு நிதித்திட்டம் தன் தரக்குறியை வீழ்த்துகிறது என்றால் அதன் திரளான சதவிகித மிகு-செயல்திறன்(Out Performance) அதிகரிக்க வேண்டும். நீண்ட கால குறைந்த செயல்திறன் ஒரு எச்சரிக்கை சிவப்பு கொடி ஆகும்.

இங்கே பிரச்சனை “நீண்ட காலம்” என்பதை வரையறுப்பதில் உள்ளது. நீங்கள் உங்கள் சொந்த வரையறை கொண்டு வர முடியும். என் கருத்துப்படி, 1 வருடம் மிகவும் குறுகிய காலமாகும். மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் ஒருவேளை நியாயமான மற்றும் சரியான கால அளவாக இருக்கலாம். ஐந்து ஆண்டுகள் ஒருவேளை இளக்காரமான காலமாக இருக்கலாம்!

இந்த காலகட்டத்தில் நிதித்திட்டம் அதன் தரக்குறியை வீழ்த்தவில்லை என்றால், அந்த நிதித் திட்டத்திலிருந்து வெளியேறவும் .

உங்கள் இடைவிடா முதலீடு திட்டங்களை திருமணம் உறவு போன்று கருதாதீர்கள். ஆனால், பரஸ்பர நிதித்திட்டம் தொழிற்துறை அது போன்ற உறவையே விரும்பும். நீங்கள் இடைவிடா முதலீடு திட்டங்களை விரும்பினால் அதை 3 வருடங்களுக்கு மிகாமல் தொடங்கலாம். ஏனெனில் இதனை நிறுத்துவது எளிதானது அல்ல (ஏன் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?) இல்லையெனில் நீங்களே மாத முதலீடு செய்யும் முறையை பின்பற்றவும்.

பரஸ்பர நிதி இடைவிடா முதலீடு திட்ட XIRR கண்காணிப்பான் – ஐ பதிவிறக்கவும்.

இந்த கருவியை முயற்சித்து பாருங்கள். இவற்றில் மேம்பாடுகள் தோன்றினால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

This post is the Tamil translation of Review Mutual Fund SIPs.

ஆசிரியர்: திரு. பட்டாபிராமன்

மொழிபெயர்ப்பாளர்: திரு. வெங்கடேஷ்

நேர்மறை மற்றும் எதிர்மறை பிடிப்பு விகிதங்களைப் புரிந்து கொள்ளுங்கள்

நேர்மறை மற்றும் எதிர்மறை பிடிப்பு விகிதம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு அளவை. இது மிகுமாற்ற சாதனங்களின் செயல்திறனை ஆய்வு செய்ய பெரிதும் உதவும்.

பரஸ்பர நிதித்திட்ட பகுப்பாய்விற்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நான் ஒரு பதிவை எழுதியிருந்தேன். இந்த இடுகையில் அதையும் சேர்ந்துக் குறிப்பிடுகிறேன்.

நேர்மறை மற்றும் எதிர்மறை பிடிப்பு விகிதங்களுடன் பரஸ்பர நிதித்திட்ட பகுப்பாய்வை எளிதாக்குதல்

அங்கு வழங்கப்பட்ட விளக்கம் மிக எளிமையாக உள்ளது. இந்த இடுகையில், இந்த விகிதங்கள் எப்படி கணக்கிடப்படுகிறது மற்றும் விளங்கப்படுகிறது என்பதை நான் விளக்குகிறேன்.

நான் மாத வருவாய் அடிப்படையில் ஒரு நேர்மறை மற்றும் எதிர்மறை பிடிப்பு கணிப்பேடு தயாரித்து வருகிறேன். இது பரஸ்பர நிதித்திட்ட மறையிடர்-வருமான பகுப்பாய்வு கணிப்பேடு கையாளும் வழியைக் காட்டிலும் மிகவும் இயலறிவார்ந்தது / எளிமையானது.

நேர்மறை பிடிப்பு விகிதம் என்ன?

5 ஆண்டுகளுக்கு, பல மாத வருமான தொகுப்பு தரவு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

1) இவற்றில் பூஜ்ஜியத்திற்கு அதிகமான (நேர்மறையான – Positive) வருமானம் கொண்ட மாதங்களை மட்டும் கருத்தில் கொண்டு நிகர CAGR-ஐ கணக்கிட்டால், அது நிதித்திட்டத்தின் நேர்மறை CAGR ஆகும்.

2) அதேபோல், பூஜ்ஜியத்திற்கு அதிகமான (நேர்மறையான) வருமானம் கொண்ட மாதங்களை மட்டும் கருத்தில் கொண்டு தரக்குறியீட்டின் நிகர CAGR கணக்கிடப்பட்டால், அது குறியீட்டின் நேர்மறை CAGR ஆகும்.

நேர்மறை பிடிப்பு விகிதம் = நிதித்திட்டத்தின் நேர்மறை CAGR / குறியீட்டின் நேர்மறை CAGR.

உதாரணமாக, குறியீட்டின் நேர்மறை CAGR 35% எனவும் மற்றும் நிதித்திட்டத்தின் நேர்மறை CAGR 34% எனவும் இருக்கும் போது, நிதித்திட்டம் குறியீட்டின் 97% வருமானத்தை பிடித்துள்ளது/அடைந்துள்ளது.

நேர்மறை பிடிப்பு விகிதம் 100% க்கும் அதிகமாக இருக்கலாம் – அதாவது நிதித்திட்டம் குறியீட்டின் வருமான அளவை வீழ்த்திய நிலையில் இருக்கும்போது (குறியீட்டின் வருமானம் நேர்மறையாக இருக்கும் பட்சத்தில்)

எதிர்மறை பிடிப்பு விகிதம் என்ன?

5 ஆண்டுகளுக்கு, பல மாத வருமான தொகுப்பு தரவு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

1) இவற்றில் பூஜ்ஜியத்திற்கு குறைவான (எதிர்மறையான – Negative) வருமானம் கொண்ட மாதங்களை மட்டும் கருத்தில் கொண்டு நிகர CAGR-ஐ கணக்கிட்டால், அது நிதித்திட்டத்தின் எதிர்மறை CAGR ஆகும்.

2) அதேபோல், பூஜ்ஜியத்திற்கு குறைவான (எதிர்மறையான) வருமானம் கொண்ட மாதங்களை மட்டும் கருத்தில் கொண்டு தரக்குறியீட்டின் நிகர CAGR கணக்கிடப்பட்டால், அது குறியீட்டின் எதிர்மறை CAGR ஆகும்.

எதிர்மறை பிடிப்பு விகிதம் = நிதித்திட்டத்தின் எதிர்மறை CAGR / குறியீட்டின் எதிர்மறை CAGR.

உதாரணமாக, நிதித்திட்டத்தின் எதிர்மறை CAGR -15% மற்றும் குறியீட்டின் எதிர்மறை CAGR -10% எனில், நிதித்திட்டம் குறியீட்டின் இழப்பில் 66% மட்டுமே பிடித்துள்ளது / அடைந்துள்ளது.

எதிர்மறை பிடிப்பு விகிதம் குறைவாக இருந்தால், எதிர்மறை நிகழ்வுகளில் இருந்து சிறந்த பாதுகாப்பு உள்ளது என்று பொருள்.

நிதித்திட்டத்தின் எதிர்மறை CAGR மற்றும் குறியீட்டின் எதிர்மறை CAGR ஆகிய இரண்டும் எதிர்மறையாக (-ve) இருந்தால் மட்டுமே, எதிர்மறை பிடிப்பு விகிதம் நேர்மறையாக (+ve) இருக்கும்.

குறியீட்டின் எதிர்மறை CAGR எதிர்மறையாக (-ve)  இருந்து, நிதித்திட்டத்தின் எதிர்மறை CAGR நேர்மறையானதாக (+ve) இருந்தால், எதிர்மறை பிடிப்பு விகிதம் எதிர்மறையாக(-ve) இருக்கும், இது ஒரு நல்ல விடயம்! இது குறுகிய கால இடைவெளிகளில் மட்டுமே கிடைக்கப்பெறும்.

பிடிப்பு விகிதம் என்ன?

பிடிப்பு விகிதம் = நேர்மறை பிடிப்பு விகிதம் / எதிர்மறை பிடிப்பு விகிதம்.

பிடிப்பு விகிதத்தின் மதிப்பு அதிகமாக இருத்தல் சிறந்தது. (எதிர்மறை பிடிப்பு விகிதம் எதிர்மறையாக (-ve) இல்லாத பொழுது)

இங்கே சில உதாரணங்கள் காண்போம்.

HDFC டாப் 200

HDFC டாப் 200 தொடர்ந்து அதிக நேர்மறை பிடிப்பு விகிதம் மற்றும் நியாயமான எதிர்மறை பிடிப்பு விகிதம் கொண்டுள்ளதை கவனிக்கவும்.

நேர்மறை பிடிப்பு விகிதம் 100% க்கு மேல் இல்லை. அதாவது, நாம் நல்ல நேரங்களை மட்டுமே கருத்தில் கொண்டால், குறியீட்டின் வருமானத்தை வீழ்த்தவில்லை. பின் எவ்வாறு Alpha-வை உருவாக்குகிறது?

குறைந்த எதிர்மறை பிடிப்பு விகிதம் மூலமாக. இது மோசமான நேரங்களில் குறியீட்டின் அளவிற்கு வீழ்ச்சியடையாததின் விளைவாக Alpha-வை உருவாக்குகிறது.

எதிர்மறை பிடிப்பு விகிதத்தை 1 ஆண்டு முதலீட்டு காலத்திற்கு கவனிக்கவும்.

படிப்பினை: சீரான எதிர்மறை பாதுகாப்பை பார்க்கவும்!

குவாண்டம் நீண்ட கால பங்கு நிதித்திட்டம்.

QLTE திட்டம் ரொக்க உத்தி மூலம் அதிகம் ஈட்டுகிறது. இது இங்கே பிரதிபலிக்காது! அதன் நேர்மறை பிடிப்பு விகிதம் மற்றும் எதிர்மறை பிடிப்பு விகிதம் HDFC டாப் 200 திட்டத்திற்கு  ஒத்ததாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

படிப்பினை: 65% பங்குகளின் தரம் 35% ரொக்கத்தை / பணத்தை விட முக்கியமானது.

இந்த விகிதங்களை ஆன்லைனில் எங்கு பார்க்கலாம் என்ற விவரங்களுக்கு

நேர்மறை மற்றும் எதிர்மறை பிடிப்பு விகிதங்களுடன் பரஸ்பர நிதித்திட்ட பகுப்பாய்வை எளிதாக்குதல்

தொடரும் …..

This post is the Tamil translation of Understanding upside and downside capture ratio.

ஆசிரியர்: திரு. பட்டாபிராமன்

மொழிபெயர்ப்பாளர்: திரு. வெங்கடேஷ்

உங்கள் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்வது எப்படி?

நீண்ட கால இலக்குகளுடன் இணைந்த ஒரு பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்யக்கூடிய எளிய வழிகளை இங்கே நான் விவாதிக்கிறேன். இது தனிநபர் பொருளாதாரத்தில் தெளிவற்ற பகுதியாகும். இதை செய்ய வேறு உகந்த வழி இல்லை. ஒவ்வொரு நபரும் அவரவரின்  சொந்த பாணியில் மதிப்பாய்வு செய்யும் வழியை அவசியமாக உருவாக்க வேண்டும். எனவே, இங்கு பல வழிகள் இருப்பது இயல்பே.

இந்த இடுகை ஏற்கனவே இருக்கும் பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை மதிப்பாய்வு செய்வதற்கு மட்டுமே. ஒரு புதிய பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை உருவாக்குவது பற்றி அல்ல. ஒரு புதிய பரஸ்பர நிதி தொகுமுதலீட்டை உருவாக்க, பொருளீட்டும் இளம் பருவத்தினர் எளிய தொகுமுதலீடு கட்டமைக்கும் யோசைனைகள் என்ற இடுகையை காணலாம்.

ஒரு பரஸ்பர நிதி தொகுமுதலீடு மதிப்பாய்வு செய்யப்பட வேண்டுமா?ஆமாம், ஆனால் ஒரு நேரடி மேலாண்மை கொண்ட பரஸ்பர நிதி(Actively Managed Mutual Fund) ஆண்டுதோறும் குறைந்தபட்சம் கண்காணிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் செயற்படுத்த/நிரூபிக்க  குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்* வேண்டும். இங்கே செயற்படுத்த/நிரூபிக்க என நான் குறிப்பிடுவது அதன் பிரிவில் தரக்குறியை (benchmark)  வீழ்த்துதல் மட்டுமே, தரவரிசையில் முன்னிலையில் இருப்பதல்ல.

* இது ஒரு தனிப்பட்ட வரையறை. உங்களுக்கு 3 ஆண்டுகளாக இருக்கலாம்.

ஒரு பரஸ்பர நிதித்திட்டம் அதன் பிரிவில் தரக்குறியை வீழ்த்தவில்லை என்றால், அதன் காரணங்கள் ஆராயப்பட வேண்டும். இதன் பின்னரே நிதியை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும்.

 • ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் (உதாரணமாக 5 வருடங்கள்), நிதிப்பிரிவின் தரக்குறி உயர்ந்து மாறாக உங்கள் நிதித்திட்டம் அதனை வீழ்த்தாவிட்டால், அதனை விற்று விடுங்கள்.
 • நிதிப்பிரிவின் தரக்குறி உயரும் போது உங்கள் நிதித்திட்டம் மதிப்புக்குறைந்தால் அதனை விற்று விடுங்கள். (இது 1-2 ஆண்டுகளுக்கு பிறகு கூட இருக்கலாம்)
 • தரக்குறியை வீழ்த்தாமல், நெருக்கமாக தங்கிவிட்டால், ஒத்த வயதுடைய மற்ற  நிதித்திட்டங்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளன  என்பதைக் கண்டறியவும்.
  • மற்ற நிதித்திட்டங்கள் சிறப்பாக செயல்பட்திருந்ததால், நீங்கள் ஒரு மாற்றத்தை கருத்தில் கொள்ளலாம் (நீங்கள் வெளியேறும் போது நிலைமை தலைகீழாக மாறக்கூடும்!)
  • மற்ற நிதித்திட்டங்கள் கூட சிறப்பாக செயல்பட வில்லை என்றால், நீங்கள் உங்கள் நிதித்திட்டத்தில் தொடரலாம் அல்லது சிறிய, ஆனால் சுவாரஸ்யமான வரலாறு கொண்ட ஒரு புதிய நிதித்திட்டத்தை தேர்ந்தெடுங்கள். ஆனால், இது ஒரு தவறான முடிவாக மாற வாய்ப்புண்டு!

நிதித்திட்ட தேர்வுகள் மற்றும் மாற்றங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தோரயமானவை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளவும்! நீங்கள் ஒரு வாய்ப்பை தேர்ந்தெடுத்து, நல்லதே நடக்கும் என நம்பலாம்.

நிதித்திட்டங்களை மாற்றுவது எப்படி?

முதலீட்டாளர்களிடையே இது ஒரு பொதுவான கேள்வி. தற்போதைய நிதித்திட்டங்களை என்ன செய்வது? இந்த நிதித்திட்டங்களை தொடர்வதா? தொடர்வதுடன் மேலும் புதிய நிதித்திட்டங்களில் புதிய முதலீடுகளை தொடங்கலாமா? அல்லது நான் முழுமையாக வெளியேற வேண்டுமா?

ஒரு ஒழுங்கான தொகுமுதலீட்டை பராமரிக்கும் ஆர்வத்தில், இருக்கும் நிதித்திட்ட மதிப்பை, வெளியேறும் சுமை (exit load) மற்றும் வரி விதிப்பை (taxation) கருத்தில்கொண்டு, முழுமையான ஆனால் படிப்படியான மாற்றத்தை பரிந்துரைக்கிறேன்.  இதை சொல்வது எளிது, செய்வது கடினம்.

பரஸ்பர நிதி மதிப்பாய்வு வகைகள்

பல்வேறு காரணங்களுக்காக நம் சொத்துக்களை மதிப்பாய்வு செய்கிறோம்:

 • இருக்கும் ஒன்று அல்லது இரண்டு நிதித்திட்டங்களை தவிர, நாம் 20 நிதித்திட்டங்களை வைத்திருக்கிறோம் என்று மட்டும் உணரலாம்.
 • வழக்கமான ஆண்டு மதிப்பாய்வு.
 • இலக்கை அணுகும் போது பங்குகளின் ஒதுக்கீட்டை எப்படி குறைக்கலாம் என்று முடிவு செய்யும் ஆய்வு.
 • மறு சமநிலைப்படுத்துதல் , அன்றாட நகர்வுகள்

பரஸ்பர நிதி மதிப்பாய்வின் உதாரணம்

இந்த விடயத்தில் என் எண்ணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை ‘நான் தற்போது எப்படி செய்கிறேன் ‘ மற்றும் ‘எப்படி நான் இதைச் செய்யக்கூடும் ‘ என்ற கலவையாகும். முதலில், தேவையான அனுமானங்களுடன் தொடங்குவோம்.

 1. உங்கள் இலக்கின் கால அவகாசம் பல ஆண்டுகள் பின்னர்தான். (குறுகிய கால இலக்கு மேலாண்மை என்பதற்கு ஒரு வித்தியாசமான அணுகுமுறை தேவை. குறுகிய கால இலக்கிற்கான தொகுமுதலீட்டில் கடன்சார் முதலீடு இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய காரியம் அதிகமில்லை. ஆனால், நிறைய பங்குசார் முதலீடு வைத்திருந்தால், ஒருவர் நிறைய இறை வழிபாடு செய்ய தான் வேண்டும்!)
 2. பங்குசார் தொகுமுதலீட்டில் எதிர்பார்க்கப்படும் வருவாய் குறித்து தெளிவு கொண்டுள்ளோம். (இந்த மதிப்பாய்வு தொகுமுதலீட்டின் பங்குசார் ஒதுக்கீடுகளுக்கு மட்டுமே. கடன்சார் ஒதுக்கீடுகள் குறைந்த மிகுமாற்ற தன்மையைக் கொண்டிருப்பதால் தொடர்ச்சியான மதிப்பாய்வுகள் தேவையில்லை என்று கருதுவோம்)
 3. இங்கே கூறப்பட்டுள்ள செயல்பாடுகள் நிதித்திட்ட மாற்றம் மட்டுமே. மறு சமநிலைப்படுத்துதல், பங்குசார்:கடன்சார் (equity:debt ratio) விகிதாச்சாரத்தை பொருத்து சொத்து ஒதுக்கீடு அல்லது பொருளாதார குறிகாட்டிகளை (economic indicators) பொருத்து சொத்து ஒதுக்கீடு போன்ற பிற நடவடிக்கைகள் கருதப்படவில்லை.
 4. மொத்த தொகுமுதலீடு குறைந்தது ஐந்து ஆண்டுகள் (5Y) முதிர்வு கொண்டிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு குறைவான தொகுமுதலீடு கொண்ட இளம் முதலீட்டாளர்கள் அவசரமாக எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை. தொகுமுதலீட்டின் செயல்திறன் குறித்து கவலை கொள்ளாமல், அவர்களின் முதலீட்டு முறைகளை கண்காணிக்க பரிந்துரைக்கிறேன்.
 5. ஒவ்வொரு மாதமும் நாம் தொகுமுதலீட்டை கண்காணிப்போம், ஆனால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்த பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தேவையான நடவடிக்கையை எடுப்போம்.
 6. பலவிதமான தொகுமுதலீடுகள் (எளிய தொகுமுதலீடு, சிறிய குழம்பிய தொகுமுதலீடு, மிகுவும் குழம்பிய தொகுமுதலீடு) உள்ளன. எனவே நடவடிக்கை நிச்சயமாக மாறுபடும். ஒரு குழப்பமான தொகுமுதலீட்டை கருதுவோம். எந்தவொரு தொகுமுதலீட்டிற்கும் இந்த வாதத்தின் தோற்றத்தை பொருத்துவது எளிது. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், கேட்கபதற்கு  தயங்க வேண்டாம்.

தனிநபர் பொருள்வளத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு  தரக்குறி தேவை. அவை மிகவும் தனிநபர் சார்ந்திருந்தால், எளிதாக முடிவு செய்ய வேண்டும்.

எனவே முதல் தரக்குறியாக  வருவாய் எதிர்பார்ப்பை கருத்தில் கொள்வோம். இந்த எதிர்பார்ப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய மிகுமாற்ற தன்மையையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தொகுமுதலீட்டில் பல மாதங்கள் மற்றும் சில நேரங்களில் எதிர்பார்த்ததை விட நிகர வருவாய் மிகக் குறைவாக இருக்கலாம்.

இரண்டாவது தரக்குறியாக எந்த நேரத்திலும் தொகுமுதலீட்டில் இருந்து பெறக்கூடிய நிகர வருவாய். இது XIRR என்ற முறையைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது ( XIRR பற்றி மேலும் படிக்க)

XIRR என்பது, தனிப்பட்ட தரக்குறி (personal benchmark) மூலம் வரையறுக்கப்படுகிறது. ‘ நிதித்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? ‘ என கணக்கிடுவது, ‘என் நிதித்திட்டத்தின் XIRR என்ன? ‘ என்ற கேள்வியின் பதிலில் உள்ளது.

XIRR என்பது தனிப்பட்ட தரக்குறியாகும். எனவே, இரண்டு நபர்களின் XIRR, அவர்கள் ஒரே தேதியில் முதலீடு செய்தாலன்றி ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

மேற்கூறிய காரணத்தால், ஒரு நிதித்திட்டதில் முதலீடு செய்தபின், நட்சத்திர மதிப்பீடுகள் ஒரு பொருட்டல்ல. (முதலீடு செய்வதற்கு முன்பும் பொருட்டல்ல, ஏனெனில் ஆய்வு நிறுவனங்கள் நீண்டகால நிலைத்தன்மையும்/சீரற்ற தன்மையையும் பொருத்து நட்சத்திர மதிப்பீடுகளில் நேர்மறை/எதிர்மறை மதிப்புகளை வழங்குவதில்லை. ஒரு முதலீட்டாளர் நிதித்திட்டங்களை சுயமாக பகுப்பாய்வு செய்வது சாலச்சிறந்தது).

ஒரு நிதித்திட்டத்தில் முதலீடு செய்தபின், நான் கவனத்தில் கொள்வது என் தொகுமுதலீட்டில் அந்த நிதித்திட்டத்தின் தாக்கம் மட்டுமே. அதன் சக ஒப்பிடுகையில் (நட்சத்திர மதிப்பீடு) அல்ல.

ஆகையால், நான் பங்குசார் ஒதுக்கீடுகளில் இருந்து வருவாய் எதிர்பார்ப்பை முடிவு செய்தபின் , அடுத்த பணியானது, நிகர XIRR-ஐ கணக்கிடுவதாகும். (இது உங்கள் முதலீட்டை சராசரியாக கூட்டு(வரி) வருமான அடிப்படையில் கணக்கிடுகிறது, இது பல முதலீடுகள் செய்யப்படும் போது CAGR க்கு சமமானதாகும்).

உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் Value Research or my mutual fund tracker or Mprofit போன்ற இணையதளங்களில் பதிந்து, XIRR-ஐ கணக்கிட முடியும். Perfios இணையதளம் இந்த வசதியை கொண்டுள்ளதா என்று எனக்கு நிச்சயமாக இல்லை.

உங்கள் தொகுமுதலீட்டில் உள்ள அனைத்து நிதித்திட்டங்களின் தற்போதைய மதிப்பு, அவற்றின் தனிப்பட்ட XIRR-ஐ மற்றும் தொகுமுதலீட்டின் நிகர XIRR-ஐ ஒரு அட்டவணையாக இப்போது நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணமாக (பெரிதாக்க சொடுக்கவும்). இது ஒரு கற்பனை.

எடுத்துக்காட்டு 1

 

தொகுமுதலீட்டின் விகிதாசாரம் (குறிப்பிட்ட நிதித்திட்டத்தின் மதிப்பு / தொகுமுதலீட்டின் மதிப்பு) XIRR (x- அச்சு) எதிராக  வரையப்பட்டுள்ளது. கருப்பு கோடு நிகர XIRR-ஐ குறிக்கிறது.

புகைப்படம் உரிமை: கேரி நைட்

மேல் காணும் கறுப்புக் கோடு ஒரு ஊசற்கட்டையின் தாங்கு புள்ளியாக  கருதப்படுகிறது. செவ்விரிவாக்கப்பட்ட  தொகுமுதலீட்டில், சில நிதித் திட்டங்கள் எப்பொழுதும் நிகர XIRR ஐ விட குறைவாகவே இருக்கும், ஆனால் ஊசற்கட்டை (தொகுமுதலீடு) நிலையானதாக இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு தாங்கு புள்ளி நிலைநிறுத்துகிறது.

மேலே உள்ள தொகுமுதலீடு பெருமுதல் பங்கு நிதித்திட்டங்களை கொண்டது. எனவே தெளிவான தேர்வு பெருமுதல் பங்கு நிதித்திட்டங்களின் ஒதுக்கீட்டை குறைக்க வேண்டும். 11% மற்றும் 8% எடை விகிதாசாரம் கொண்ட இரு பெருமுதல் பங்கு நிதித்திட்டங்கள் உள்ளது. இவற்றை விற்று 4% எடை விகிதாசாரம் கொண்ட பெருமுதல் பங்கு நிதித்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

எந்த தனிதத்துவமும் அல்லாத ஒரு நிதித்திட்டம் உங்கள் தொகுமுதலீட்டில் குறைந்தபட்சம் ஒரு சில வருடங்கள் இருந்து அதன் XIRR மதிப்பு  உங்கள் தொகுமுதலீட்டின் நிகர XIRR-ன் மதிப்பைவிட கீழே உள்ளது என்றால் அந்த நிதித்திட்டம் நீக்கம் செய்வதற்கு கருதப்படவேண்டும்.

மேலும் ஒழுங்கமைத்தல் சாத்தியம், ஆனால் தேவையற்ற மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான தொகுமுதலீடுகள் மிகச் சரியாக இருந்து வருவதில்லை. அவை படிப்படியாக மாற்றியமைக்கப்படலாம்.

எடுத்துக்காட்டு 2. மேற்கண்ட உதாரணம் எளிமைக்காக மாற்றப்பட்டது. இவை உண்மையான தரவுகள். இவற்றில் நாம் என்ன புரிந்துகொள்வது?

இங்கே இருக்கும் தெரிவுகள் மிகவும் நேரடியானதல்ல. நீங்கள் தொகுமுதலீட்டை ஒழுங்கமைக்க விரும்பினால், சில இரக்கமற்ற மாற்றங்களுடன் சேர்ந்து ஆழ்ந்த புரிதல்/ஆய்வு தேவைப்படுகிறது. நான் தனிப்பட்ட முறையில் இதை தற்காலிகமாக இவ்வாறே விட்டு விடுவேன்.

ஒருவர் Money control பங்குசார் நிதித்திட்ட தொகுமுதலீடு ஒப்பீட்டுக் கருவி மூலம் தொகுமுதலீடுகளை மேற்பொருத்தி பார்க்கலாம். பங்குகளின் மேற்பொருந்துதல் அளவு மிகவும் அதிகமாக இருந்து, 40% க்கும் மேலாக கைக்கொண்டுள்ள முதலீட்டுப்பங்கு ஒத்திருந்தால், இவற்றில் ஒரு நிதித்திட்டம் அகற்றப்பட வேண்டும்.

மாற்றுவதற்குப் பதிலாக, ஏற்கனவே இருக்கும் யூனிட்களை வைத்துக்கொண்டு மற்ற நிதித்திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதனால், விரைவில் குறைந்த XIRR-ஐ ஈட்டும் நிதித்திட்டங்களின் எடை விகிதாசாரம் குறைந்து, உங்கள் தொகுமுதலீட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. உங்கள் தொகுமுதலீட்டின் தாங்கு புள்ளி மாறும்!

மேலே காட்டப்பட்டுள்ள ஒரு அட்டவணையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுவதே இந்த இடுகையின் நோக்கம். இது தொகுமுதலீட்டை வழிநடத்தும் மற்றும் பாதிக்கும் நிதித்திட்டங்கள் குறித்த  ஒரு சிறந்த முன்னோட்டத்தை இது வழங்குகிறது. மேலும், அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க உதவுகிறது.

நானும் மற்ற நபர்களை போன்று அதிக XIRR-ஐ பெற  விரும்புகிறேன். எனவே இரண்டாவது அணுகுமுறை நிகர, XIRR ஐ எதிர்பார்ப்பு வருவாய்க்கு மேலே வைக்க முயற்சிப்பது (மேலும் நம்பிக்கை வைப்பது) ஆகும். இதனோடு, படிப்படியான மாற்றங்களைச்  செய்து இரண்டு வரையறைகளுக்கான (எதிர்பார்ப்பு வருவாய் மற்றும் நிகர XIRR) இடைவெளியை அதிகரிக்க முடிந்த அளவிற்கு முயற்சிக்க வேண்டும்.

அதாவது, அதிக XIRR-ஐ கொடுக்கும் நிதித்திட்டங்களின் எடை விகிதாசாரத்தை அதிகரிப்பதன் மூலம், வரைபடத்தில் கருப்பு வரிகளை வலதுபுறம் நகர்த்த முயற்சி செய்யலாம். இவற்றை, தொகுமுதலீட்டின் செவ்விரிவாக்கத்தை பாதிக்காத வண்ணம் செய்யவேண்டும்.

முழங்கால் அதிர்வுகள் போன்ற மாற்றங்களால் இதை நிறைவேற்ற முடியாது.  ஒரு சரியான முறை வரையறை செய்து அதை படிப்படியாக செயல்படுத்த வேண்டும். தவணை (SIP) வழியாக அல்லாமல் நேரடியாக செய்யும் முதலீடுகள் இங்கு உதவும். மாதாந்திர முதலீடுகளை தொடரலாம்.

ஒரு நிதித்திட்டத்தோடு உணர்வுபூர்வமாக இணையாமல், இரக்கமற்ற ஆனால் நோக்கம் குறிக்கோள் நிலையோடு இருக்கவேண்டும். இந்த நிலையில் நான் மிகவும் நன்றாக இருப்பதில்லை, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாறிவிட்டேன். இரக்கமற்ற என்றால் உடனடியாக என்று அர்த்தம் இல்லை. மாற்றம் நடக்க சில மாதங்கள் ஆகலாம். ஏனெனில் , வெளியேறும் சுமைகள் மற்றும் வரி விதிப்புகளும் முக்கியதத்துவம் வாய்ந்த அம்சங்கள் தானே!

மாற்றங்கள் உங்களை காயப்படுத்தக்கூடும். நாம் வெளியேறிய நிதித்திட்டம் மிகவும் நன்றாக செயல்பட்டு, நாம் சென்ற புதிய நிதித்திட்டம் அதலபாதாளம் நோக்கி செல்லலாம்.

மேலே கூறப்பட்டுள்ளவை பலகோடி சாத்தியக்கூறுகளில் ஒன்று மட்டுமே. தனிப்பட்ட தரக்குறிகளின் முக்கியத்துவத்தை  முன்னிலைப்படுத்துவதே இந்த இடுகையின் நோக்கம். இந்த சிக்கலுக்கு பல தீர்வுகள் உள்ளன. தனிப்பட்ட முறையில், நான் ஒவ்வொரு நிதித்திட்டத்தின் தரக்குறியாக நிதித்திட்டத்தின் XIRR-ஐ தொகுமுதலீட்டின் நிகர XIRR-யோடு பொருத்தி பார்க்க விரும்புகிறேன். உங்கள் விமர்சனங்களை வைக்க தயங்கவேண்டாம் மேலும் வேறு மாற்று உத்திகள் உங்களிடமிருந்தால் அவற்றை முன்மொழியுங்கள்.

தொடங்கும்பொழுதே, உங்கள் இலக்கிற்கான தொகுமுதலீடு எளிய தொகுமுதலீடாக இருந்து, அது எதிர்பாத்த வருவாயை விட அதிக/நெருங்கிய நிகர XIRR-ஐ கொடுத்தால், தொகுமுதலீட்டில் அதிக நடவடிக்கைக்கான தேவையிராது. இந்த இனிய நிலையில் தான் அஷால் ஜுஹாரி உள்ளார். 😊

This post is the Tamil translation of How to review your mutual fund portfolio?

ஆசிரியர்: திரு. பட்டாபிராமன்

மொழிபெயர்ப்பாளர்: திரு. வெங்கடேஷ்