தனிநபர் நிதிநிலை சுய மதிப்பீடல் – சரிபார்த்தல் பட்டியல்

இங்கே நீங்கள் ஒருதனிநபர் நிதிநிலை சுய மதிப்பீடல் குறித்த   சரிபார்த்தல் பட்டியலை காணலாம்.  நீங்கள் விரும்பினால், அச்சு கோப்பு (PDF) மூலம் பிரதி எடுத்து, ஒவ்வொரு நிலையிலும் உள்ள கேள்விகளுக்கு விடை பெற முயற்சியுங்கள்.

நான் இங்கே கேள்விகளை மட்டுமே முன்வைக்கிறேன். இதற்கானவிரிவான பதில்கள் / தீர்வுகளை முந்தைய பதிவுகளில் காணலாம். நீங்கள் அவற்றை தேடுபொறி மூலம் தேடி அடையலாம்.

நீங்கள்  வாரத்திற்கு இரு கேள்விகளுக்கான விடை பெற முயன்றால் , நீங்கள் விரைவில் உங்கள் நிதிநிலைமையை  உங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன். இந்த சரிபார்த்தல் பட்டியல் முழுமையானதல்ல. ஆனால் முக்கிய கூறுகளை பற்றி விவரிக்கும்.

செயல் #1: திட்டமிடல்

  1. எனது வாழ்க்கை போதுமான அளவிற்கு ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா?

அதாவது, என் காலத்திற்குப் பின் , என் குடும்பம் அடையவேண்டிய இலக்குகளை (உடனடி, குறுகிய கால மற்றும் நெடுங்கால) அவர்கள் அடைய போதுமான பணத்தை  எனது காப்பீடு கொடுக்க வேண்டும். சிலர் இதுபற்றி தீவிர ஆய்வு செய்யாமல் 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுக்கலாம் என கூற வாய்ப்புண்டு. உண்மையில், இந்த ஆய்வு செய்ய உங்கள் நேரத்தில் 15 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். காப்பீட்டு அளவை தீர்மானிப்பதை விட காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்யவே நாம் அதிக நேரம் எடுத்துக்கொள்வோம்.

  1. என் காலத்திற்கு பின் வரும் காப்பீடு தொகையை எப்படி உபயோகபடுத்த வேண்டும் என்று என் வாழ்க்கைத்துணை அல்லது என் நியமினியிடம்(nominee) விவாதித்திருக்கிறேனா?

உங்கள் வாழ்க்கைத்துணை இதுபற்றி பேச விரும்பவில்லை என்றால், இது குறித்த விரிவான உங்கள் குறிப்புகளை எழுதி காப்பீட்டு பத்திரத்துடன் வைக்கவும். மேலும், உங்கள் நிதி அறிவுரைஞரின் (financial planner/adviser ) தொடர்பு விவரங்களையும்(contact details) சேர்த்து எழுதி வைக்கலாம்

  1. எனக்கும் என் குடும்பத்திற்கும் போதுமான மருத்துவக் காப்பீடு (Medical Insurance)செய்யப்பட்டுள்ளதா?

இது மிகவும் ஒரு எளிமையான கூற்று. ஆனால், பலர் இதனை விரயச் செலவாக பார்ப்பது வருத்தமளிக்கிறது. மேலும், பலர் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்வதில்லை.

  1. அவசர செலவுகளை (Emergency Expenses ) சமாளிக்க எனது தயார் நிலை என்ன?

உங்கள் தற்போதைய மாத செலவில் 6 முதல் 12 மடங்கு மதிப்பினை நீங்கள் அவசர செலவுகளுக்காக ஒதுக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு (medical insurance with cashless hospitalization) இருப்பினும் நீங்கள்  மருத்துவமனையில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

  1. எனது அவசர செலவு நிதி குறைந்து போனால், அதனை மறுபூர்த்தி செய்ய எனது திறன் என்ன?

உங்கள் மாத வருமானத்தை மொத்தமும் முதலீடு மற்றும் செலவுகளுக்கு பயன்படுத்தாமல் குறிப்பிட்ட அளவு உங்கள் அவசர செலவு நிதிக்காக சேர்த்து வையுங்கள்.

  1. எனது நிகர மதிப்பு (networth) என்ன?

இந்த நடவடிக்கை, உங்கள்  முதலீடுகளை பட்டியலிட்டு அதன் தற்போதைய மதிப்பை தீர்மானிக்க நிர்பந்திக்கும்.

  1. எனது இலக்குகள் அனைத்தையும் பட்டியலிட்டுவிட்டேனா? அதாவது தொடர் மற்றும் குறுகிய கால இலக்குகள் (5 ஆண்டுகளுக்கு குறைவாக), இடைநிலை இலக்குகள் (5 முதல் 10 ஆண்டுகள்) மற்றும் நெடுங்கால இலக்குகள் (10 ஆண்டுகளுக்கு மேல்)
  1. எனது இலக்குகளுக்கு தற்போது ஆகும் தோராயமான செலவுகள் எவ்வளவு என்று தெரியுமா?
  1. எனது இடைநிலை மற்றும் நெடுங்கால இலக்குகளை அடைய போதிய நிதி ஒதுக்கீடு செய்துவிட்டேனா?

குறுகிய கால இலக்குகளுக்கு முற்றிலும் 100% கடன் சம்பந்தப்பட்ட முதலீடுகளை மட்டும் பயன்படுத்தவும்.

  1. எனது இலக்குகளை அடைய எவ்வளவு சேமிக்க அல்லது முதலீடு செய்ய வேண்டும் எனத் தெரியுமா?

உங்கள் தொகுமுதலீட்டின்(portfolio) நிகர வருமானத்தை (returns) இலக்கு திட்டமிடல் கருவி கொண்டு கணக்கிட வேண்டும். இதில், நம் ஓய்வுக்காலத்தில் நிலவும் வட்டி விகிதத்தை 7% எனக் கொள்ளலாம்.

  1. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு என்னால் முதலீடு செய்ய முடியும்?

உங்கள் பணப்புழக்கத்தை கருத்தில் கொண்டு, மாத முதலீட்டுத் தொகையை தீர்மானியுங்கள்.

  1. இலக்குகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்போது அதை எவ்வாறு எதிர்கொள்வது?

சில வழிமுறைகள்: இலக்குகளை தள்ளிப் போடுங்கள், இலக்குகளின் செலவின் அளவை குறைக்க முயற்சி செய்க. இலக்குகளுக்கான முதலீட்டை அதிகரிக்க முயற்சி செய்க. இதைவிடுத்து குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் என நம்பி மாற்றமிகு முதலீட்டு சாதனங்களில்(volatile instruments) முதலீடு செய்ய வேண்டாம். அது  உங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும்.

  1. மேற்கூறிய விடயங்கள் குறித்து எனது வாழ்க்கைத்துணையுடன் பேசியிருக்கிறேனா?

எனது தனிநபர் முதலீட்டுத் திட்டத்தை(personal investment plan) இயற்றி விட்டேனா? மேற்கூறிய விடயங்கள் குறித்து பேசத் தயங்கும் நம் வாழ்க்கைத்துணைக்கு, கைப்பட எழுதிய முதலீட்டு திட்டம் பேருதவியாக அமையும்.

செயல் #2: செயல்படுத்துதல்

  1. எந்த முதலீட்டு சாதனத்தை எந்த இலக்குகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என தெரியுமா?
  1. எனது தொகுமுதலீடு (investment portfolio) செவ்விரிவான சொத்து வகைகளை கொண்டுள்ளதா (diversified asset class )?
  1. எனது நிதி ஒடுக்கீடு அடிப்படையில் எனது முதலீட்டை தொடங்கிவிட்டேனா?

அனைவராலும் ஒரே நேரத்தில் எல்லா இலக்குகளையும் கையாள முடியாது. ஓய்வுக் காலத்தில் தேவைப்படும் செலவுகளுக்காக செய்யும் முதலீடே நமது முதல் இலக்காக இருக்க வேண்டும்.

  1. எனது முதலீடுகளை கண்காணிக்கின்றேனா?

இலக்கு திட்டமிடல் கருவி காட்டும் கால அளவை கருத்தில்கொண்டு போதுமான அளவு மாத முதலீடு செய்கிறேனா?

  1. எனது உயில் எழுதப்பட்டுள்ளதா?

செயல் #3: மறுசீராய்வு

  1. எனது கடன் பத்திர (debt) முதலீடு மற்றும் நிறுவன பங்கு (equity) முதலீடுகளிலிருந்து வரும் தொகுமுதலீட்டின் அக ஈட்ட விகிதம் (portfolio XIRR) என்ன? 

எனது முதலீட்டு உறையின் நிகர வருமானம், இலக்கு திட்டமிடல் கருவி தெரிவிக்கும் நிகர வருமான அளவோடு ஒத்துப் போகிறதா?

  1. எனது இலக்கு உறைகளின் தற்போதைய மதிப்பு என்ன?

இந்த இலக்குகளுக்காக மேலும் நான் முதலீடு செய்யாவிட்டால், இந்த தொகுமுதலீட்டின் தற்போதைய மதிப்பு எந்த அளவிற்கு உயரும்?

  1. நான் இன்று பணிநிறைவு பெற்றால், எனது ஓய்வூதியத் வைப்பு நிதியைக் கொண்டு, எத்தனை ஆண்டுகள் பணவீக்கம் உள்ளடக்கிய என் செலவுகளை செய்ய முடியும்?

இதனை X ஆண்டுகள் என எடுத்துக்கொள்வோம்.

  1. வேலை பார்க்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் X-ன் மதிப்பை ஒவ்வொரு ஆண்டு (ஓய்வுக் கால ஆண்டு) உயர்த்துகின்றேனா?

    இதுவே ஓய்வுக்கால தொகுமுதலீட்டின் உண்மையான அளவீடாகும்.

This page is the Tamil translation of  Personal Finance Self Evaluation Checklist

ஆசிரியர்: freefincal
மொழிபெயர்ப்பாளர்:  வெங்கடேஷ் ஜெம்புலிங்கம்