Children’s மியூச்சுவல் ஃபண்ட் – இவ்வகை ஃபண்ட்கள் தேவையா?

ஆதித்ய பிர்லா நிறுவனம் புதிதாய் ஒரு ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. பால பவிஷ்ய யோஜனா என்ற இந்த ஃபண்ட் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஃப்ண்ட் என்கிறது அந்நிறுவனம். இவ்வகை ஃபண்ட்கள் தேவையா?

ஆசிரியர் அறிமுகம்
பாஸ்டன் ஸ்ரீராம் –  சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், தில்லியில் ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தபின் 2002 முதல் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அருகில் இருக்கிறார். தில்லியின் IIFT இன் Executive Masters in International Business  பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் ஒரு மென்பொருள் கன்சல்டன்சியில் வைஸ் ப்ரெசிடெண்டாக பணி புரிகிறார்.
தனிநபர் சேமிப்பு, முதலீடு, ஆயுள் காப்பீட்டுத் துறைகளில் பெரும் ஆர்வம்  கொண்டவர். தமிழில் கொண்ட ஆர்வம் காரணமாக சோசியல் மீடியாவில் பெரும்பாலும் தமிழில் எழுதி வருகிறார். 25 ஆண்டுகால முதலீட்டு அனுபவத்திலும் படிப்பதன் மூலமும் தான் அறிந்து கொண்டவற்றை பிறருக்கு பயனளிக்கும் வகையிலும் ஃபேஸ்புக்கிலும் பத்திரிக்கைகளிலும் கட்டுரைகளாக எழுதிவருகிறார். இவர் கட்டுரைகள் பெரும்பாலும் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்  பற்றியே இருக்கும். இவரை bostsonsriram [at] gmail [dot] com  என்ற மின்மடலில் தொடர்பு கொள்ளலாம்

ஐஐடிக்கு கட்டணம் 1.78 லட்சத்திலேருந்து 12 லட்சமாச்சு, மெடிக்கல் எண்ட்ரன்ஸுக்கு செலவு 2.3 லட்சத்திலேருந்து 12 லட்சமாச்சு என்றெல்லாம் பயமுறுத்திவிட்டு 10,000 ரூபாய்  மாதாந்திர முதலீடு 20 ஆண்டுகள் கழித்து  10% வளர்ச்சியில் 76 லட்சமாகும் 15% வளர்ச்சியில் 1.5 கோடியாகும் என்றெல்லாம் படம் காட்டுகிறது இத்திட்டத்தின் கையேடு. கண்ணில் பட்ட இடமெல்லாம் தேடி விட்டேன், திட்டத்தின் தனித்துவம் என்று எதையும் சொல்லவேயில்லை.  என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு நல்ல காரணம் கூட எனக்குத் தென்படவேயில்லை.

பாப்பா பேர்ல ஒண்ணு பையன் பேர்ல ஒண்ணுன்னு ரெண்டு பாலிசி போட்டுடலாம் சார் என்கிற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் லெவலுக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் வந்திருப்பது பெரும் சோகம். எச் டி எஃப் சி, ஆக்சிஸ், யூடிஐ, எஸ்பிஐ மேக்னம் ஏன் எல் ஐ சி மியூச்சுவல் ஃபண்ட் கூட சில்ட்ரன்னு பேர் வச்ச் ஃபண்ட் வச்சிருக்கு நமக்கும் ஒண்ணு இருக்கட்டும்னு ஆரம்பிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்.

சேமிப்பும் முதலீடும் இன்றியமையாதவை. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. பிள்ளைகள் கல்லூரிப் படிப்புக்கு சேமித்தே ஆகணும், அதற்கு நீண்ட கால சந்தை முதலீடுதான் என் சாய்ஸும் – ஆனால் அதற்காக இப்படி ஒரு தனி ஃபண்டில் முதலீடு செய்யத் தேவையில்லை. அனைத்து சேமிப்பு மற்றும் முதலீட்டு ஆலோசகர்களும் சொல்றா மாதிரி டைவர்சிஃபைட் போர்ட்ஃபோலியோ இருந்தால் போதும் (லார்ஜ் கேப், மிட் கேப், கடன் பத்திரங்கள் கொண்டவை) – இவை தவிர படிப்புக்கு ஒரு ஃபண்ட், மருத்துவச் செலவுக்கு ஒரு ஃபண்ட், சாப்பாட்டுக்கு, உடைக்கு, சாவு செலவுக்குன்னு தனித்தனியா ஃபண்ட்கள் தேவையில்லை. வரிவிலக்கு போன்ற சிறப்பு காரணங்கள் கொண்ட ஃபண்ட்கள் விதிவிலக்கு

படிப்புக்காக சேமிக்கும் சிறப்பு ஃபண்ட் என்று சொல்கிறார்களே, அப்படி என்ன இருக்குன்னு பாத்தா புழக்கத்தில் இருக்கும்  அக்ரசிவ் ஹைப்ரிட் மற்றும் கன்சர்வேடிவ் ஹைப்ரிட் ஃபண்ட்கள்தான், ப்ரத்யேகமான அம்சங்கள் ஏதுமில்லை.

எவ்விதச் சலுகையும் இல்லாமல் 5 ஆண்டுகள் லாக் இன் ப்ரீயட் கொண்ட ஒரு ஃபண்டில் முதலீடு செய்வது அர்த்தமற்றது. நீண்ட காலம் ஒரு ஃபண்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற வாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலீடு செய்துள்ள ஃபண்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்றாலோ, அந்த கேட்டகரியில் வேறு ஃபண்ட்கள் இதை விட சிறப்பாக செயல்படுவதைப் பார்த்தாலோ, முதலீட்டு வேறு ஃபண்ட்களுக்கு மாற்றும் திறம் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும்.

பிள்ளைகள் படிப்புக்கான சேமிப்பு, நாமே நினைத்தாலும் 5 ஆண்டுகளுக்கு பணத்தை எடுக்க முடியாது என்கிற உளவியலை வைத்து ஃபண்டை சந்தைப்படுத்த நினைக்கிறது ஆதித்ய பிர்லா நிறுவனம். இதில் முதலீடு செய்வதை விட லாக் இன் பீரியட் இல்லாத, 5 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாக செயல்படும், கட்டணம் கம்மியாக இருக்கும் வேறொரு அக்ரெசிவ் ஹைப்ரிட் ஃபண்டில் முதலீடு செய்வது நலம்

குறிப்பிட்ட நாளை எதிர்பார்த்து சேமிக்கும் ஃப்ண்ட்களை டார்கெட் டேட் ஃபண்ட் என்பார்கள் – ரிட்டையர்மெண்ட், கல்லூரிச் செலவு போன்றவை எந்தாண்டு வரும் என்று பெரும்பான்மையானோர் சொல்லிவிடுவார்கள். 15 ஆண்டுகள் கழித்து வரும் கல்லூரிச் செலவுக்கோ 30 ஆண்டுகள் கழித்து வரும் ரிட்டையர்மெண்டுக்கோ சேமிக்கும் ஃபண்ட்கள் ஆரம்பத்தில் அதிக ஈக்விட்டி, கம்மி பாண்ட் என்று ஆரம்பித்து ஈக்விட்டி குறைந்து கொண்டே வரும். டார்கெட் டேட் அருகில் வரும்போது பெரும்பான்மை பாண்டிலும் சிறிய அளவு ஈக்விட்டியிலும் இருக்கும். அடுத்தாண்டு கல்லூரிக்கு பணம் வேணும் என்ற போது 80% ஈக்விட்டியில் பணத்தை வைப்பது நல்லதல்ல.

அமெரிக்காவில் 529 ப்ளான் என்று பிள்ளைகள் படிப்புக்குச் சேமிக்கும் திட்டம் இருக்கு. அதில் செய்யும் முதலீட்டை படிப்புச் செலவுக்கு மட்டுமே உபயோகிக்க முடியும். பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லும் போது ஃபண்ட் நிறுவனம் நேரடியாக கல்லூரிக்கு பணத்தை அனுப்பும். 2011இல் பிறந்த மகள் படிப்புக்கு நான் சேமிக்க நினைத்தால் 80% ஈக்விட்டியிலும் 20% பாண்டிலும் ஆரம்பித்து அவளுக்கு 16-17 வயதாகும் போது அப்படியே தலைகீழாகிடும். 80% பாண்டிலும் 20% மட்டுமே ஈக்விட்டியிலும் இருக்கும். மேலும் இதில் செய்யும் முதலீட்டுக்கு வருமானவரி விலக்கும் கிடைக்கும்.

இதைப் போன்ற ஒரு திட்டமே இந்தியாவிற்குத் தேவை – இப்போதிருக்கும் சில்ட்ரன்ஸ் ஃபண்ட் என்ற போர்வையில் இருக்கும் ஹைப்ரிட் ஃபண்ட்கள் அல்ல.

இந்த மாற்றத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மட்டும் கொண்டு வந்து விடமுடியாது. மத்திய அரசு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும், வருமானவரி விலக்கு வழங்க வேண்டும். கல்லூரிகளும் கருப்புப் பணமின்றை முழுக் கட்டணத்தையும் முறைப்படி வாங்க முன்வரவேண்டும். அதுவரை எல்லா சில்ட்ரன்ஸ் ஃபண்ட்களும் பத்தோடு ஒன்று பதினொன்று ஹைப்ரிட் ஃபண்ட்களே.