ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் பெருநோய்களுக்கு எதிரான காப்பீடு என்பன ஒரு குடும்பம் எதிர்பாராத மற்றும் விரும்பத்தகாத சூழ்நிலைகளை சமாளிக்க உதவும் ஒரு நிதி வழுவூட்டல் சாதனம். இது மருத்துவச் செலவுகள், மரணம் மற்றும் இயலாமை மூலம் ஏற்படும் வருமான சரிவை எதிர்கொள்ள உதவும். இவற்றை நிதி வழுவூட்டல் சாதனம் எனக்கூறக் காரணம், இவை நம் நெடுங்கால இலக்கிற்கான சேமிப்பு மற்றும் முதலீடுகளை பாதுகாக்க உதவுகின்றன. இந்த காப்பீடுகள் மேற்கூறிய செலவுகள் ஏற்படும்போது நம் சேமிப்பில் குறையும் அளவை ஈடுகட்டும். இதனால் நம் முதலீடு மற்றும் சேமிப்பு மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடும். மேலும், இவை நமது முதலீடுகள் கூட்டாகும் (compounding) வாய்ப்பை தடைபடாமல் காக்கின்றன.
நிதி வழுவூட்டல் முறைகள் பற்றி சில குறிப்புகள்:
அவசர செலவுகள் நிதி (Emergency Fund):
இது ஒரு முக்கியமான நிதி வழுவூட்டல் முயற்சியாகும். அவசர செலவு முடிந்தபின் இந்த நிதியை நாம் மறுபூர்த்தி செய்யும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதை செய்து முடித்தால், இந்த அவசர செலவு நிதியை சேமிக்கும் சாதனம் ஒரு பொருட்டாக இருக்காது. பொதுவாக, இவற்றை நீர்மச்சொத்து சாதனங்களில் (liquid asset instruments) சேமித்து வைக்கலாம்.
நீள்கால ஆயுள் காப்பீடு (Term Life Insurance):
நீள்கால ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேர்வு செய்த மக்கள், பெரும்பாலும் காப்பீடு தொகையாக ஒரு கோடி ரூபாய்யை தேர்ந்தெடுப்பர் அல்லது எவ்வளவு காப்பீடு வேண்டும் என்று தெரியாமல் திகைத்து நிற்பர்.
துரதிருஷ்டவசமாக இரு அணுகுமுறைகளும் பெரிதாக மக்களுக்கு உதவுவதில்லை. காரணம், பொதுவாக ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரின் வருமானம் மற்றும் மறையிடர் வரைவுகளை (risk profile) கருத்தில் கொண்டு, அவர்களின் ஆயுள் காப்பீட்டிற்கான உச்ச வரம்பை முன்னமே தீர்மானித்துவிடுவர்.
ஆதலால், உங்களுக்கு உகந்த 2 அல்லது 3 காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்து, அவர்களிடம் உங்கள் விவரங்களை தெரிவித்து, அந்நிறுவனம் உங்களுக்கு வழங்கும் உச்ச வரம்பை தெரிந்துகொள்ளுங்கள்.
அதன்பின் ஒரு செயல் திட்டத்தை உருவாக்குங்கள். அதில், கீழ்கூறிய விடயங்களுக்கு ஒதுக்க வேண்டிய அளவை தீர்மானியுங்கள்.
- நிலுவை கடன்களை ஈடுகட்டுவது.
- பணவீக்கம் உள்ளடக்கிய வருமானம் மற்றும் எத்தனை ஆண்டுகள் (குழந்தைகள் வேலையில் சேரும் வரை)
- பள்ளி செலவுகளுக்காக பணவீக்கம் உள்ளடக்கிய சேமிப்பை உருவாக்க (சிறப்பு பயிற்சிக்கு ஆகும் செலவையும் சேர்த்து)
- கல்லூரிக் கட்டணம்
- குழந்தைகளின் திருமண செலவு (முடிந்தால்)
நினைவில் கொள்க: நீள்கால ஆயுள் காப்பீடு ஒரு நல்ல திட்டமே. ஆனால், உங்கள் காலத்திற்கு பின், காப்பீட்டு தொகையை தவறான முதலீட்டு சாதனங்களில் முதலீடு செய்தால் என்னவாகும்? எனவே, ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, அதை வழிநடத்தும் உங்கள் நியமினியிடம் விவாதிக்கவும்.
காப்பீட்டு உச்சவரம்பு தொகையை மேற்கூறிய இலக்குகளுக்கு சிறப்பான முறையில் ஒதுக்க வேண்டும். இதை உங்கள் நியமினியுடன் விவாதித்து அதை கைப்பட எழுதிய செயல் திட்டமாக மாற்றவேண்டும்.
உங்கள் நியமினியை, தேவைப்பட்டால் ஒரு நிதி அறிவுரைஞரை சந்திக்க சொல்லவும். அவர் ஆயுள் காப்பீட்டு பணத்தை பெறவும் மற்றும் உங்கள் செயல் திட்டத்தை கருத்தில் கொண்டு காப்பீட்டு பணத்தில் ஒதுக்கீடு செய்து முதலீடுகளை செய்ய உதவி செய்வார். இதற்காக, அவர் கோரும் கட்டணத்தை கொடுக்கவேண்டும்.
மருத்துவக் காப்பீடு: (Health or Medical Insurance)
மருத்துவக் காப்பீடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. எனினும் இதில் காசாளாத காப்புறுதி இழப்பீட்டுக் கோரிக்கை (cashless claim) என்பது ஒரு சலுகையே தவிர உரிமையல்ல என்பதை நினைவில் கொள்க. மருத்துவ செலவுக்கான பணத்தை திரும்ப பெற உங்களுக்கு உரிமையுண்டு. எனவே காசாளாத காப்புறுதி இழப்பீட்டுக் கோரிக்கைக்கு எப்பொழுதும் ஒப்புதல் கிடைக்கும் எனக் கருத வேண்டாம். அதாவது, மருத்துவமனையில் நீங்கள் பணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்படலாம் (உங்கள் மாத செலவில் 12 மடங்கிற்கும் மேலாக).
அவசரகால நிதி என்பது நெடுங்கால இலக்கு. அது ஒரு தாகம் தணியாத அரக்கனை போன்றது. நீங்கள் தொடர்ந்து அதற்கு நீர் ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய விடயங்களை குறித்து வைக்கவேண்டும். இவற்றோடு, மருத்துவக் காப்பீட்டு பத்திரம் மற்றும் காப்பீட்டு அடையாள அட்டையையும் சேர்த்து வைக்கவேண்டும். இவற்றை உங்கள் வாழ்க்கைத்துணையும் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் புரிந்துகொள்வது சாலச்சிறந்தது.
விபத்துக் காப்பீடு: (Accident Insurance)
இது தனியார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுக்குழுமத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவசியம் தேவையான ஒரு காப்பீடு.
இந்த காப்பீடு ஒரு சிக்கலான காப்பீட்டு வகை. சில குறிப்பிட்ட விபத்துக்களால் ஏற்படும் இயலாமைக்கு மட்டுமே மொத்த காப்பீட்டு தொகையும் வழங்கப்படும். மற்ற விபத்துக்களுக்கு ஆயுள் காப்பீட்டு தொகையில் சில சதவிதமே வழங்கப்படும்.
விபத்துக்களால் மட்டுமே ஒருவர் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழக்க நேரிடும் என்றில்லை. சில வியாதிகள் கூட இதற்கு காரணமாக அமையலாம்.
எனக்கு எவ்வளவு விபத்துக் காப்பீடு தேவை? நான் இறக்க நேர்ந்தால், நான் இல்லாத காரணத்தினால், என் குடும்ப செலவு குறைய வாய்ப்புண்டு. ஆனால், நான் பாதிக்கப்பட்டு இயலாமைக்கு தள்ளப்பட்டால், என் குடும்ப செலவுகள் அதிவிரைவாக அதிகரிக்கும். அதனால், நீள்காலஆயுள் காப்பீட்டைக் காட்டிலும் விபத்துக் காப்பீடு அதிகமாக இருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாக, யதார்த்த உலகில் இந்நிலை அரிதாகவே அமையும்.
10, 20, 30 லட்சம் என்பது போன்ற விபத்துக் காப்பீடு போதுமானதல்ல. மேலும் அனைவராலும் அதிக விபத்துக் காப்பீட்டு தொகையை பெற முடியாது. அது அந்த தனிநபரின் வருமானம் மற்றும் வேலையின் தன்மையை பொருத்தது.
இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த உச்ச வரம்பையே விபத்துக் காப்பீட்டுக்கு அளிக்கின்றன. அதிகபட்சமாக, TATA AIG நிறுவனம் மட்டுமே 1 கோடி ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு அளிக்கிறது.
இந்நிலையில், சாதகமான விடயம் ஒன்று உண்டு என்றால் அது 10 லட்சம் ரூபாய்க்கான காப்பிட்டுக் கட்டணம் மிகவும் குறைவு. வங்கிகள் வழங்கும் கூட்டு காப்பீட்டு திட்டங்களிலிருந்து விலகியே இருங்கள்.
பெருநோய்கள் காப்பீடு: (critical illness insurance)
மீண்டும் சிக்கலான ஒரு காப்பீட்டு வகை. சில குறிப்பிட்ட வழியில், பெருநோய்களால் தாக்கபட்டு(ஒரு மாதத்திற்குள் இறக்கவும் கூடாது) உடல்நிலை சரியில்லாமல் போகவேண்டும்.
விபத்துக் காப்பீட்டைப் போல, இதுவும் குறைந்த தொகைக்கே காப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், இது நீள்காலஆயுள் காப்பீட்டை விட உயர்ந்த காப்பீட்டுக் கட்டணத்தை (Insurance Premium) கொண்டது.
இந்த காப்பீட்டை வாங்கும்முன் உங்கள் குடும்பத்தில் யாருக்கேணும் பெருநோய் வந்ததற்கான சான்று உள்ளாத எனப் பார்க்கவும். ஒன்று விட்ட உறவுமுறைகளிலும் தேடலாம். கடினமாக தேடினால், ஒவ்வொரு குடும்பமும் பெருநோய் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கொண்டிருக்கும்.
நம் வருவாயில் முதலீடு செய்யத்தகுந்த அனைத்து உபரி சேமிப்புகளையும் காப்பீடு பெறுவதற்கே செலவு செய்தால், நம் இலக்கிற்காக சேமிக்க மற்றும் முதலீடு செய்யும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
அதனால், நாம் அனைத்து வகையான காப்பீடுகளையும் குறைந்த காப்பீட்டு தொகைக்கு வாங்க முயல்வோம் அல்லது விபத்து மற்றும் பெருநோய் காப்பீட்டை அறவே தவிர்த்துவிடுவோம். எந்த வகையிலும், இந்த முடிவை எடுப்பது சற்றே கடினமாகும்.
ஒருவேளை, 30 லட்சம் விபத்துக் காப்பீடு, 30 லட்சம் பெருநோய் காப்பீடு, உச்சவரம்பையுடைய நீள்காலஆயுள் காப்பீட்டையும், மருத்துவக் காப்பீட்டையும் வாங்கினால், இவை அனைத்தின் மொத்த காப்பீட்டு கட்டணம் கிட்ட தட்ட 1 லட்சம் ரூபாய் என்றளவில் இருக்கும். இது 30 வயதொத்த ஒரு நபரின் காப்பீட்டு கட்டணம்.
அதிர்ஷ்டவசமாக, நாம் விபத்துக் காப்பீடு, பெருநோய் காப்பீட்டை உபயோகிக்க வேண்டிய வாய்ப்பு ஏற்படாமல், மருத்துவக் காப்பீட்டை குறைந்த அளவு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், இலக்குகளுக்காக முதலீடு செய்வதில் நம் கவனத்தை செலுத்தலாம்.
நம்மால் முடிந்த அளவிற்கு சிறந்த சாதனங்களில் முதலீடு செய்தால், பல வருடங்கள் கழித்து நாம் எதிர்கொள்ளும் பெருங்கொண்ட செலவுகளையும் தாண்டி நம் சேமிப்பு இருக்கும். ஒரு திடமான நிதி வழுவூட்டல் செய்ய நிறைய நேரமும் அதிர்ஷ்டமும் வேண்டும்.
This page is the Tamil translation of Notes on Financial Fortification.
ஆசிரியர்: freefincal
மொழிபெயர்ப்பாளர்: Venkatesh Jambulingam